குவைத் தீ விபத்து
நேற்று அதிகாலை குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் உள்ள சமையலறையில் முதலில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீயானது கட்டடம் முழுவதும் பரவ ஆரம்பித்திருக்கிறது. தீயின் தீவிரத்தை உணர்ந்த பலர், கட்டடத்தின் மாடியிலிருந்து கீழே குதித்தாகவும் கூறப்படுகிறது. சிலர் கட்டடத்திற்குள் மாட்டிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த கட்டடத்தில் சுமார் 160 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்துக்காக வேலை பார்ப்பவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 40 இந்தியர்கள் உட்பட 53 நபர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல்
இந்த தீவிபத்தில் உயிரிழந்த 40க்கும் மேற்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். தவிகவின் எக்ஸ் பக்கத்தில் “குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்.” என்று விஜய் பதிவிட்டுள்ளார்