நெல்லை சரக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையில் தமிழக கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நெல்லை சரக புட்செல் போலீசார் தீவிர சோதனை நடத்தியதில் சுமார் 200 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்து 376 பேரை கைது செய்துள்ளனர். 


ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நெல்லை சரக போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக  தென்காசி, புளியரை, செக்போஸ்ட் மற்றும் கன்னியாகுமரி களியக்காவிளை மற்றும் நெட்டா செக்போஸ்ட் ஆகிய இடங்களில் இரவு பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த 5 மாதங்களில் பிடிபட்ட ரேசன் அரிசி, வாகனங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து புட்செல் போலீசார் அறிக்கை விடுத்துள்ளனர். அதில்,  குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் விஜயகார்த்திக் ராஜா, நெல்லை உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்பார்வையில் தமிழக கேரள எல்லையான புளியரை சோதனை சாவடி, கன்னியாகுமரி, களியக்காவிளை மற்றும் நெட்டா சோதனை சாவடிகளில் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டன.


அச்சோதனையில் இந்த வருடத்தில் இதுவரை ரேசன் அரிசி சம்பந்தமாக 313 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 200 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டரை கடையில் பயன்படுத்தியதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை மண்ணெண்ணெய் 1170 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேசன் துவரம் பருப்பு 1510 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் 114 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 40 இருசக்கர வாகனங்களும், 7 மூன்று சக்கர வாகனங்களும், 67 நான்கு சக்கர வாகனங்கள் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  இந்த வருடத்தில் ரேசன் அரிசி கடத்தல் குற்றவாளிகளின் மீது கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக ஈடுபடுவோர்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டணம்மில்லா தொலைபேசி மூலம் வரப்பெற்ற தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேசன் அரிசி கடத்தல் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து கள்ளச்சந்தை தடுப்புக்காவல் சட்டம் பாயும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.