மக்களுடைய கருத்தை ஆழமாக சித்தரித்து இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள் என நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்படும் தூய சவேரியார் கல்லூரியில் இண்டிகோ 2025 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கொம்பு சீவி படக்குழுவைச் சேர்ந்த இயக்குநர் பொன்ராம், நடிகர்கள் சரத்குமார், சண்முக பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், “கொம்பு சீவி படம் டிசம்பர் 19ம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவர்கள் கொம்பு சீவி படத்தை என்ஜாய் செய்து பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் மத்தியில் சில கருத்துகள் பதிவு செய்யப்படுகிறது. எப்படி ட்யூட் படத்தில் கூறப்பட்ட சில கருத்துகள் சமுதாயத்திற்கு ஏற்றவை அல்ல என சொன்னார்கள். சில ஆழமான கருத்துகளை நாம் சொல்லும்போது அதில் எது தவறு என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை உள்ளது. அதுபோல தான் கொம்பு சீவி படமும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கஞ்சா விற்பது போல காட்டப்பட்டிருக்கிறது. அது ஒழிக்கப்பட வேண்டும் என சொல்லப்படுகிறது.
எப்படி அழிக்க வேண்டும் என்பதை சொல்வதற்காக கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கதை எந்த காலக்கட்டத்தில் அமைக்கப்பட்டது என்பதை இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார். அன்றைய காலக்கட்டத்தில் வைகை அணையில் தண்ணீர் வந்தால் தான் விவசாயம் செய்ய முடியும். 12 கிராமங்கள் அகற்றப்பட்ட பிறகு தான் அந்த அணை கட்டப்பட்டது என்பது பாடப்புத்தக்கத்தில் கூட சொல்லப்படாத வரலாறு.
அந்த பகுதியில் கஞ்சா பயன்படுத்தப்பட்டது என்பதை தான் படத்தில் சொல்லப்பட்டது. அதைத் தவிர நானோ, சண்முகப் பாண்டியனோ மற்றும் படக்குழுவினரோ புகைப்பிடிப்பதில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். அந்த பழக்கத்தை நீங்கள் வரவைத்துக் கொள்ள வேண்டாம் என நாங்கள் நினைத்துக் கொள்கிறோம்.
அதனால் தான் நான் 71 வயதிலும் இப்படி இருக்கிறேன். நான் புகைப்பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை. அதனால் சில கருத்துகளை சொல்லும்போது யாரை வைத்து சொன்னால் ரீச் ஆகுமோ அதை செய்கிறார்கள். ட்யூட் படத்தில் என்னை சாதி வெறியனாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் நான் மனித சாதியை விரும்புகிறவன். மக்களுடைய கருத்தை ஆழமாக சித்தரித்து இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். தவறாக சித்தரிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.