மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் ( டிசம்பர்-23 ) இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்களிடமிருந்து 427 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நேரில் பெற்றுக்கொண்டார்.
குவிந்த மனுக்கள் - விரிவான விவரம்
திங்கட்கிழமை தோறும் நடைபெறும் இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இன்று காலை முதலே பொதுமக்கள் திரளாக வந்து தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். பெறப்பட்ட 427 மனுக்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக மட்டும் அதிகப்படியாக 144 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பிற முக்கிய கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு
* நிலம் சார்ந்தவை: இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 35 மனுக்களும், ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி 15 மனுக்களும், நில அபகரிப்பு தொடர்பாக 18 மனுக்களும் பெறப்பட்டன.
* சமூக பாதுகாப்பு: முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 36 மனுக்களும், மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்து 10 மனுக்களும் பெறப்பட்டன.
* வாழ்வாதாரம்: வேலைவாய்ப்பு கோரி 12 மனுக்களும், சுய தொழில் தொடங்க வங்கிக் கடன் மற்றும் தொழிற்கடன் கோரி 28 மனுக்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக 12 மனுக்களும் வழங்கப்பட்டன.
* அடிப்படை வசதிகள்: இலவச கான்கிரீட் வீடு வேண்டி 19 மனுக்களும், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி 22 மனுக்களும் பெறப்பட்டன.
* இதர புகார்கள்: சட்டம் ஒழுங்கு தொடர்பாக 11, தொழிலாளர் நலன் சார்ந்து 9 மற்றும் பல்வேறு பொதுவான புகார்கள் குறித்து 50 மனுக்கள் என மொத்தம் 427 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.
ஆட்சியரின் அதிரடி உத்தரவு
மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றைச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக ஒப்படைத்தார். ஒவ்வொரு மனுவின் மீதும் மிகுந்த கவனத்துடன் ஆய்வு மேற்கொண்டு, தகுதியான மனுக்களுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், மனுதாரர்கள் அளித்துள்ள கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்களை உரிய காலத்திற்குள் மனுதாரர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
கூட்டத்தின் நிறைவாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
* பேட்டரி சக்கர நாற்காலிகள்: தலா ரூ.1,06,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை 2 பயனாளிகளுக்கு (மொத்தம் ரூ.2.12 லட்சம்) ஆட்சியர் வழங்கினார்.
* தையல் இயந்திரம்: குடும்ப வறுமை நிலையில் உள்ள ஒரு பயனாளிக்கு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.8,650 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
பங்கேற்ற அதிகாரிகள்
இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் .உமாமகேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மலைமகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மாணிக்கண்ணன் (கணக்கு) மற்றும் வீ.சந்தான கோபால கிருஷ்ணன் (நிலம்) உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்த மக்களும் நேரடியாக ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க முடிந்தது. இருப்பினும் ஒவ்வொரு வாரமும் மனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்கிறதை பார்க்கும் போது மக்களின் குறைகள் குறையாமல் நாளுக்கு நாள் அதிகப்பதையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.