பள்ளி மாணவர்களுக்கு ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கல்வியை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 11, 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்களை NCERT உருவாக்கி வருகிறது.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ், பள்ளிக் கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. இதன் முக்கிய அங்கமாக, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பிரத்யேக ஏஐ பாடத் திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்களை வடிவமைக்க, ஒரு சிறப்புக் குழுவை என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) அமைத்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் பதிலளித்த கல்வி அமைச்சகம், தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF-SE) 2023-க்கு ஏற்ப இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. மேலும், 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடப்புத்தகத்தில், அனிமேஷன் மற்றும் கேம்கள் உருவாக்கும் திட்டத்தில் ஏஐ கருவிகளின் பயன்பாடு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
எதிர்கால முடிவுகள்
2026- 27ஆம் கல்வியாண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் 3-ம் வகுப்பு முதலே ஏஐ கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக சிபிஎஸ்இ 3 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வரைவுப் பாடத்திட்டத்தைத் தயார் செய்துள்ளது. தொடக்க வகுப்புகளில் அடிப்படை ஏஐ கருத்துகளும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் மேம்பட்ட கணக்கீட்டு சிந்தனை மற்றும் ஏஐ பாடமும் கட்டாயமாக்கப்பட உள்ளன.
'SOAR' திட்டம்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஏஐ விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்கவும் 'SOAR' (Skilling for AI Readiness) என்ற புதிய தேசியத் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. 'விக்சித் பாரத் 2047' என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
3 நிலைகளில் பயிற்சி
இந்தத் திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று நிலைகளில் (AI to be Aware, AI to Acquire, AI to Aspire) பயிற்சி அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 45 மணி நேரம் இந்தப் பயிற்சி அளவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.