நகைச்சுவை சித்தர் நாகேஷ்.. அப்படி அழைத்தால் தகும். அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் முக்கியமானவர் முத்தாய்ப்பானவர் நாகேஷ். அவரது மகன் ஆனந்த் பாபு.  


1980களில் இருந்த ஹீரோக்களில் நடனத்தில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கியவர் ஆனந்த் பாபு . தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என சில தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். அவர் நடித்த பல படங்களில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.  ஆனந்த்பாபுவின் நடனத்திறமையைப் பார்த்து வியக்க வேண்டாம் ஏனெனில் நாகேஷ் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல நடனக் கலைஞரும் கூட. ஆகையால் இயல்பாகவே அந்த ஜீன் ஆனந்த் பாபுவுக்குள் இருந்திருக்க வேண்டும். அதனாலேயே நடிப்பும் நடனமும் அவருக்கு அத்தனை இயல்பாக வந்தது.
ஆனால் தான் இயல்பாகவே ஒரு நடிகராக என்றும் உணர்ந்ததில்லை எனக் கூறுகிறார் ஆனந்த் பாபு. தான் நடிகனாக வேண்டும் என்றுமே விரும்பியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.




அவருடைய பேட்டியிலிருந்து..


நான் என் இளமைக்காலத்தில் நடிகனாக வேண்டும் என்று நினைக்கவே இல்லை. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒரு சின்ன கல்ச்சரல்ஸ் புரோகிராமில் கலந்து கொள்ள வேண்டுமென்றாலும் கூட அம்மாகிட்ட சொல்லி அப்பாவிடம் அனுமதி வாங்குவேன்.


அப்படியொரு கலை நிகழ்ச்சிக்காக இரண்டு நாட்கள் தயாரானேன். அப்புறம் அம்மா, அப்பாவை உட்கார வைத்து ஆடிக் காட்டினேன். அப்பா பார்த்துவிடு ஒண்ணுமே சொல்லவில்லை. ரெஜி நான் ஷூட்டிங் போறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.


எனக்கு சினிமாவில் ஆர்வமில்லை. ஆனால் ஸ்போர்ட்ஸ், பியானோ வாசிப்பதில் ஆர்வம் இருந்தது. என்னை மருத்துவராக்க வேண்டும் என்றே அப்பா ஆசைப்பட்டர்.


ஆனால், என்னை நடிப்பு வாய்ப்பு தேடிவந்தது. அப்படி நான் கல்லூரியில் சேர ஆயத்தமானபோது ஒரு பட வாய்ப்பு வந்தது. அப்பா அவர் நண்பர் கேட்டதால் தட்ட முடியாமல் என்னை அந்தப் படத்தில் நடிக்கச் சொன்னார். அப்படித்தான் நான் நடிகனாகி இன்று உங்களின் முன்னால் நிற்கிறேன்.


புது வசந்தம் சேரன்பாண்டியன், சிகரம் , வானமே எல்லை போன்ற பல வெற்றிப்படங்களில் நடுத்திருக்கிறார் நடிகர் ஆனந்த் பாபு. இடையில் அவர் நடிப்புக்கு பிரேக் கொடுத்தார். மது போதைக்கு அடிமையானதாக பல கதைகள் கசிந்தன. பின்னர், முன்னணி தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்திருந்தார் நடிகர் ஆனந்த் பாபு. ஆனால் அவையாவும் மக்கள் மனதில் பெரிதாக இடம் பிடிக்கவில்லை. இப்பொழுது விஜய் டிவியில் அவர் நடிக்கும் மௌனராகம் தொடர் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.


நடிப்பில் நாகேஷின் சேட்டைகளையும், நடனத்தில் அவரது ஸ்டைலையும் கொண்ட ஆனந்த் பாபு இன்னொரு என்ட்ரி கொடுத்து சினிமாவில் மீண்டும் வலம் வரவேண்டும் என்பது நாகேஷ் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.