எனது படங்களின் தோல்விக்கு நான் தான் காரணம், பார்வையாளர்களைக் குறை சொல்ல நான் விரும்பவில்லை  என நடிகர் அக்‌ஷய் குமார் மனம் நொந்து பேசியுள்ளார்.


நடிகர் அக்‌ஷய் குமாரின் செல்ஃபி படம் பிப்.24ஆம் தேதி வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்று வருவதுடன், வசூல்ரீதியாகவும் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.


ஒருபுறம் பாய்காட் பாலிவுட் பிரச்சாரத்தால் பாலிவுட் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருவதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில்,  மற்றொரு புறம் அக்‌ஷய் குமார் சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில், தன் படங்களின் தோல்விக்கு தான் மட்டுமே காரணம் என அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார். ”உங்கள் படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்தால், நீங்கள் மாற வேண்டிய நேரம். இது எனக்கான எச்சரிக்கை.


இந்தப் படங்களின் தோல்விக்கு நூறு சதவீதம் நான் தான் காரணம். ரசிகர்களை நான் குறை சொல்ல விரும்பவில்லை. நீங்கள் சரியான விஷயத்தை படத்தில் கடத்தாமல் இருந்திருக்கலாம்.


இது எனக்கு முதன்முறையாக நடக்கவில்லை. ஒரு காலத்தில் நான் தொடர்ச்சியாக 16 தோல்விப் படங்கள் கொடுத்திருக்கிறேன். விஷயம் என்னவென்றால், இது உங்கள் சொந்த தவறு காரணமாக நடக்கிறது. பார்வையாளர்கள் மாறிவிட்டார்கள், நாம் தான் மாற வேண்டும்” எனப் பேசியுள்ளார். 


இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து அக்‌ஷய் குமார் நடித்துள்ள செல்ஃபி படம் 150 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் 10 கோடிகளுக்கும் குறைவாகவே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இவ்வளவு குறைவான வசூலை அக்‌ஷய் குமாரின் படங்கள் ஈட்டியதில்லை. 


சென்ற ஆண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளிவந்த பச்சன் பாண்டே, ராம்சேட்டு, சாம்ராட் பிரித்விராஜ், கட்புட்லி, ரக்‌ஷா பந்தன் ஆகிய படங்கள் மோசமான தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது செல்ஃபி படமும் தோல்விப் படமாக உருவெடுத்துள்ளது.


மேலும் படிக்க: Manu James Passes Away : அதிர்ச்சி.. விரைவில் வெளியாக இருந்த முதல் கனவு திரைப்படம்... படம் வெளியாகும் முன்பே மறைந்த அறிமுக இயக்குநர்!