பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித் தனது குழுவினருக்கு பிரியாணி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துணிவு படம் வெளியானது. இப்படம் அஜித்துக்கு நல்ல ஹிட் கொடுத்த நிலையில், அவர் அடுத்ததாக விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். துணிவு படம் முடிந்த பிறகு பைக்கில் உலக சுற்றுலா சென்றிருந்தார் அஜித். கிட்டதட்ட 4, 5 மாதங்கள் அதில் சென்றதால் அடுத்தப்பட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. 





இதற்கு நடுவில் லைகா நிறுவனம் தயாரிக்க விடா முயற்சி படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மகிழ் திருமேனி இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அர்ஜூன், ஆரவ் என பலரும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டிலும், சென்னையிலும் நடைபெற்றது. 






இதனிடையே இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடக்கவிருந்த நிலையில் அஜித்குமார், மருத்துவப் பரிசோதனைக்காக சென்றிருந்தார். அப்போது அவருக்கு காது அருகே வீக்கம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வில் இருந்த அஜித் மீண்டும் ஷூட்டிங்கிற்கு முன் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. தொடர்ந்து பைக் ஓட்ட கற்றுத் தந்த வீடியோவும் வெளியானது.இந்நிலையில் தனது பைக் குழுவினருக்கு அஜித் பிரியாணி செய்து கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


ஏற்கனவே பல பிரபலங்கள் அஜித் தங்களுக்கு பிரியாணி செய்து கொடுத்தார் எனவும், தான் நடிக்கும் படங்களில் பணிபுரிபவர்களுக்கு தன் கையால் பிரியாணி செய்து தருவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.