அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 4 கார்களில் வந்த 8 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் மற்றும் தற்போதைய விராலிமலை எம்.எல்.ஏ சி விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வரக்கூடிய நிலையில் ஏற்கனவே அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர் கே நகர் தேர்தல் பண பட்டுவாடா செய்ததாகவும், குட்கா முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் அடிப்படையிலேயே தற்போது இலுப்பூரில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகப்படியான கற்கள் வெட்டி எடுத்ததாக புகார் எழுந்தது. அவரது குவாரியிலும் ஏற்கனவே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் அந்த சோதனையின் தொடர்ச்சியாக அமலாக்க துறையினர் தற்போது கல்குவாரியில் சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.