தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது ராயன் மற்றும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு ஒரு திரைப்படமாக உருவாக உள்ளது. அதில் இளையராஜாவின் கதாபாத்திரமாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார். இதை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கமல்ஹாசன், பாரதிராஜா, வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 



இளையராஜா பயோபிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பாரதிராஜா பேசுகையில் "உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் பற்றி நாம் படித்துள்ளோம். ஆனால் அவர் ஒரு அதிசய பிறவி, இந்தியாவின் ஒரு நினைவு சின்னம் இளையராஜா. நான் சிறு வயது முதலே அவரை பார்த்துகொண்டு இருக்கிறேன். எப்படி அவருக்கு அப்படி ஒரு ஞானம் என நானே அவரை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். அவரின் கண்களில் ஒரு பவர் இருக்கிறது. அவர் கையை தட்டினாலே இசைதான். கம்போஸ் செய்ய ஆரம்பித்தாலே அவரையே மறந்துவிடுவார். 


இளையராஜா பயோபிக் படத்தை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. மிகவும் கஷ்டம். பல ஆராய்ச்சி செய்து அவருடன் நெருங்கிப்பழகி எடுக்க வேண்டும். இது ஒரு படமாக இல்லாமல் இந்தியாவின் ஒரு பொக்கிஷமாக வரவேண்டும். 


அதே போல தனுஷை பார்த்தாலும் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன். நடிகர், இயக்குநர், எழுத்தாளர் என அனைத்துமாய் எதற்கும் அடங்காதவன் தனுஷ். மனிதாபிமானவன் உள்ளவன் தனுஷ். கடவுள் தனுஷையும், இளையராஜாவையும் ஒன்றாக இணைத்து மிகப்பெரிய மேஜிக் செய்ய உள்ளார். வெற்றிமாறன், தனுஷ், கமல்ஹாசன் போன்றவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பொக்கிஷங்கள். 



16 வயதினிலே படம் எடுக்கும் போது கமல்ஹாசன் மிக பெரிய ஹீரோ. தென்னிந்திய மொழி படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வந்த சமயம் நான் இது போல கேரக்டர் பற்றி சொன்னதும் எனக்காக நடித்து கொடுத்தார். கோவணம்தான் காஸ்டியூம் என்று சொன்னாலும் அதை தயக்கம் இன்றி நடித்து கொடுத்தார். அந்த படத்தில் அவரின் நடை, உச்சரிப்பு எல்லாமே அவருடையதுதான். 


அருண் மாதேஸ்வரன் ஒரு டைப்பான ஆள். அவருடைய படங்களை எடுத்துப் பார்த்தால் தெரியும். அற்புதமான இயக்குநர். எப்படி அவரால் இப்படி எல்லாம் படம் எடுக்க முடிகிறது என்பதை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.   


உடம்பு சரியில்லாமல் இருந்தேன். இளையராஜா படம் என்றதும் நான் இங்கே வந்துவிட்டேன். என்னுடைய கடைசி மூச்சு உள்ள வரையில் சினிமாவை நான் நேசிப்பேன். இந்த படம் நிச்சயம் ஒரு வேர்ல்ட் ரெக்கார்ட் செய்யும். இந்த படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பேசி இருந்தார் இயக்குநர் பாரதிராஜா.