நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை (Valimai) படம் வெளியாகி இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வலிமை:
2018 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய மூன்று பேரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் இணைந்தனர். இந்தப் படம் சுமாரான வெற்றியை பெற்ற நிலையில் மீண்டும் இந்த மூன்று பேரும் இரண்டாவதாக இணைந்த படம் தான் வலிமை. 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த படம் கடைசியாக 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தான் வெளியானது.
வலிமை படத்தில் கார்த்திகேயா, ஹியூமா குரேஷி ,குர்பானி நீதிபதி, சுமித்ரா, சுனைனா பாதம், வைஷ்ணவி சைதன்யா, ஜி.எம்.சுந்தர், சைத்ரா ரெட்டி, புகழ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
சென்னையில் சாத்தானின் அடிமை என்று அழைக்கப்படும் மர்ம கும்ப கும்பல் போதைப்பொருள் கடத்தல் திருட்டு மற்றும் கொலைகளில் தொடர்ச்சியாக ஈடுபடுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் அதிகாரியாக அஜித் நியமிக்கப்படுகிறார். வழக்கை விசாரித்து குற்றவாளிகளின் நிரம்பும் நிலையில் தனது தம்பியும் இந்த கும்பலில் ஒருவர் என்ற உண்மையை கண்டுபிடிக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதை வலிமைப்படுத்தி கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
அப்டேட் கேட்டு நொந்துபோன ரசிகர்கள்
உண்மையில் வலிமை படம் வெளியானபோது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ரசிகர்கள் காத்திருந்த காத்திருப்பு வீணானது என்றே சொல்லப்பட்டது. அதற்கு காரணம் வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் தள்ளிக் கொண்டே சென்றது. மீண்டும் இயல்பு நிலை திரும்பி ஷூட்டிங் தொடங்கிய நிலையில் ரசிகர்கள் அப்டேட் கேட்டு படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ மூன்று பேர் வீட்டின் கதவை தட்டாதது மட்டும்தான் மிச்சம்.
அந்த அளவுக்கு உள்ளூர் தொடங்கி உலகம் வரை எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என கேட்டு காத்திருந்தனர். ஒருகட்டத்தில் டென்ஷனாகி அஜித் அறிக்கையே விட்டு படத்தின் அப்டேட் உரிய நேரத்தில் வரும் என கூறினார். ஆனால் வலிமை படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக சென்ற நிலையில் இரண்டாம் பாதையில் அம்மா சென்டிமென்ட் என வேறு பக்கம் கதை சென்றதால் படம் டோட்டலாக சொதப்பியது என்ன ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.
மேலும் வில்லனை துரத்தும் அஜித்தின் பைக் காட்சிகள், அதே போல் குற்றவாளிகளின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லும்போது நடக்கும் பஸ் சேசிங் சண்டை என இரண்டும் மிக அருமையாக படமாக்கப்பட்டன அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் அஜித் ஒரு பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். ஆக ஆக்சன் பாதி செண்டிமெண்ட் மீது என டபுள் ட்ரீட்டாக வெளியாகி இருந்த வலிமை படம் அஜித் ரசிகர்களை பொறுத்தவரை ஒரு வெற்றி படம்தான்.
அதேசமயம் மீண்டும் அஜித்குமார், இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகிய 3 பேரும் 3வது முறையாக 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.