அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதராக இருப்பவர் பயணிதரன். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் பல நாடுகளில் அயலுறவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அஜர்பைஜானில் இந்திய தூதராக பணியாற்றும் இவர், திரைப்படங்கள், புத்தகங்கள் குறித்து தனது கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அஜர்பைஜானில் நடைபெற்ற விடாமுயற்சி படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் மற்றும் படக்குழுவினரைச் சந்தித்து தனது வீட்டில் விருந்து அளித்தார். இந்த நிலையில், அஜர்பைஜான் நாட்டிற்குச் சென்ற அஜித்தை கடந்த செப்டம்பர் மாதம் சந்தித்த இந்திய தூதர் பயணிதரன், தான் மொழிபெயர்த்த அலியும் நினோவும் என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
அஜித்திடம் புத்தகம் வழங்கிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், இதுதொடர்பாக இணையத்தில் பதிவிட்டிருப்பதாவது, “
விடாமுயற்சியும், இந்திய தூதர் வழங்கிய புத்தகம்:
‘விடா முயற்சி’ படப்பிடிப்பிற்காக நண்பர் அஜித் அஜர்பைஜானுக்கு வரும் தருணங்களில் சந்தித்தபோது என் மொழியாக்கம் - எழுத்து வேலைகள் பற்றியும் பேச்சு வந்தது. சீனமொழியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்வது போக நான் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்வதில்லை (அதை நான் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதால்) என்று அவருக்கு ஒரு முறை சொன்னேன். கூடவே, ‘அலியும் நினோவும்’ என்கிற உலகப் புகழ் பெற்ற நாவல் இன்னும் இந்தியாவை எட்டவில்லை என்கிற குறையையும், அந்த சுவாரஸ்யமான காதல்கதையை நான் மொழியாக்கம் செய்துகொண்டிருப்பதையும் சொன்னேன்.
‘விடா முயற்சி’ படப்பிடிப்பு நடந்த சில இடங்களில் ‘அலியும் நினோவும்’ நாவலின் பல நிகழ்ச்சிகள் நடப்பதையும் விளக்கினேன். நிற்க. ‘அலியும் நினோவும்’ நாவல் என் கைக்கு வந்தபிறகு அஜித் அஜர்பைஜானுக்கு வந்திருந்தார். ஆகவே, நாங்கள் சந்திக்கும்போது அவருக்குக் காட்ட ஒரு பிரதியைக் கொண்டுபோயிருந்தேன். நாங்கள் சந்தித்தபோது அவரிடம் ஒரு பிரச்சனையைச் சொன்னேன்: காதல் கோட்டை திரைப்படம் பற்றிய விஷயம்.
காதல் கோட்டை:
அதற்குச் சில நாட்களுக்கு முன்பு தான் ஒரு வீடியோவில் சமீஹா மரியம், நேர்காணல் ஒன்றில் ‘காதல் கோட்டை’ என்று ஒரு படம் இருப்பதே தெரியாத இளைய தலைமுறை பற்றி ஒரு வீடியோ துணுக்கு கண்ணில் பட்டது. நான் பார்த்த ஓரிரு அஜித் படங்களில் அதுவும் ஒன்று என்பதாலும், அது எனக்குப் பிடித்த படம் என்று மனதில் இருந்ததாலும், அதில் வரும் ‘நலம், நலமறிய ஆவல்’ பாட்டு இன்னமும் பிடித்த பாடல்கள் பட்டியலில் உண்டு என்பதாலும் யூடியூபில் அந்தப் படத்தின் சில பகுதிகளைப் பார்த்தேன். யாரோ ஒரு புண்ணியவான் மொத்தப் படத்தையும் பகுதி பகுதியாகப் போட்டிருக்கவே அதைப் பார்த்து முடித்துவிட்டுத் தூங்கப் போனேன்.
அடுத்த நாள் காலையில், “நேற்று ஏன் நீ வெகு நேரம் தூங்கவில்லை?” என்று வைதேகி கேட்டபோது, “காதல் கோட்டை” என்று உண்மையான விடையைச் சொன்னபோது வைதேகி என்னைப் பார்த்த பார்வையைச் சொன்னேன். “ஏதாவது முக்கியமான விஷயம்னு சொன்னாலும் தூக்கத்தைக் கெடுத்துக்கக் கூடாதுன்னு மணி அடிச்ச மாதிரி தூங்கப் போயிடுவே, காதல் கோட்டைக்கு மட்டும் கண் விழிச்சிப் பார்ப்பியா?” என்று எழுந்த கேள்விகளைச் சொன்னேன். அஜித் உட்பட எல்லோரும் சிரித்தோம். 7. ‘அலியும் நினோவும்’ புத்தகத்தில் அஜித் வாழ்த்தி எழுதினார்: “Dear Dharan & Vaidehi, Congratulations!! Wishing You and Your Family a Beautiful Life!! Love Ajith Kumar”
கிண்டல்:
‘அலியும் நினோவும்’ புத்தகமும், அஜித்தும் நாங்களும் ஒளிப்படம் எடுத்துக்கொள்ள நின்றபோது அந்தப் படத்துக்கு வைக்கப்போகும் தலைப்பு பற்றிக் கிண்டலடித்துக்கொண்டோம். அஜித்துக்குக் காதல் மன்னன் என்று ஒரு பட்டப்பெயர் உண்டாம். (அதையே அவர் நடித்த ஒரு படத்துக்குப் பெயராக வைத்திருக்கிறார்கள் என்பதைப் பின்னால் அறிந்துகொண்டேன்).
சடசடவென்று நடந்த உரையாடலில் ஒளிப்படத்துக்காக வந்த சில தலைப்புகள்: இந்தியாவின் காதல் மன்னனும் அஜர்பைஜானின் காதல் காவியமும் - காதல் கோட்டை - இந்தியாவிலும் அஜர்பைஜானிலும் - காதல் மன்னனின் காதல் கோட்டையும் அஜர்பைஜானின் காதல் காவியமும்.
இந்த உரையாடலின் போது நாங்கள் மூன்று பெரும் அடக்கமுடியாமல் சிரித்த தருணத்தை விட்டுவிடாமல் அருகில் இருந்த ஒரு நண்பர் ஒளிப்படம் எடுத்திருந்தார். பிறகு சிரிப்பை அடக்கிக்கொண்டு ‘சாதாரணமாக’ சில படங்கள் எடுக்கப்பட்டன. கையில் இருக்கும் புத்தகம், ஒளிப்படத்தில் நாங்கள் எப்படி இருக்கிறோம் என்கிற விஷயங்களைப் பற்றி யோசிக்காமல் நாங்கள் மனம்விட்டுச் சிரித்துக்கொண்டிருக்கும் படத்தில் தான் உயிர்ப்பு தூக்கலாக இருக்கிறது. அதனால்தான் எங்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.