இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தன்னை பற்றி எழுந்த விமர்சனங்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில் தான் பேஸ்புக் பக்கத்தில் இருந்து விலகி விட்டதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி 2கே கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டு வரும் படம் லவ் டுடே. இதில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் படத்தையும் இயக்கியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற சூப்பர் ஹிட் படத்தை எடுத்திருந்தார். அந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியிலும் பிரதீப் நடித்திருப்பார். படம் இயக்குவது நடிப்பது மட்டுமின்றி பாடல், வசனம், திரைக்கதை ஆகிய துறைகளிலும் பிரதீப் தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ரூ.10 கோடியில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் லவ் டுடே படம், வசூலில் ரூ.50 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியானது. இதனால் பிரதீப்பின் அடுத்தடுத்த படங்கள் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேநேரத்தில் கடும் சர்ச்சையிலும் அவர் சிக்கியுள்ளார். தற்போது 29 வயதாகும் பிரதீப் சரியாக 12 ஆண்டுகளுக்கு முன்பு 2010ல் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை திட்டி பதிவு ஒன்றை வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதனைக் கண்ட யுவன் ரசிகர்கள் பின் ஏன் தனது லவ் டுடே படத்துக்கு யுவனை மியூசிக் போட பிரதீப் அழைத்தார் என கேள்விகளால் வறுத்தெடுத்தனர். அதுமட்டுமல்லாமல் தனது குறும்படத்தை அனைத்து பிரபலங்களும் பார்க்குமாறு ட்விட்டரில் அவர் அழைப்பு விடுத்த பதிவு அடங்கிய ஸ்க்ரீன்ஷாட்டும் இணையத்தில் வைரலானது.
ஆனால் பிரதீப் ரங்கநாதனுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்தனர். 12 ஆண்டுகளுக்கு முன் அவர் 17 வயதான இளைஞர் தான். அப்போது என்ன தெரியும் பிற்காலத்தில் சினிமாவில் இருப்போம். அப்போது தனக்கு பிடிக்காதவர்கள் இப்போது தன் படங்களில் இணைவார்கள் என நினைத்தா பார்த்திருப்பார். காலம் எல்லாவற்றையும் மாற்றியது போல, அவரது எண்ணத்தையும் அபிப்ராயத்தையும் பின்னால் மாற்றியிருக்கலாம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதீப் ரங்கநாதன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்தார். அதில் “பரவி வரும் பல பதிவுகள் போட்டோஷாப் செய்யப்பட்டவை என்றும், ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் முகநூல் கணக்கு செயலிழக்கப்பட்டுள்ளது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டிய அவர்களுக்கு நன்றி.
மேலும் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் கசப்பான வார்த்தைகள் கொண்ட பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்துவிட்டேன், வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக்கொள்கிறோம், அதைத் திருத்த முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் ஒரு சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன் என கூறியுள்ளார்.