வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி, மோசடி செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் மோசடியில் ஈடுபட்ட ஐஎப்எஸ் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், கூடுதல் வட்டி தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையினரும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தான், சென்னையை சேர்ந்த மேலும் ஒரு நிறுவனத்தின் மோசடி அம்பலமாகியுள்ளது.


கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற பெயரில் செயல்படும்  தனியார் நிறுவனம் , வாடிக்கையாளர்களின் முதலீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் 15 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு ரூ.15,000 வட்டியாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணம் அந்த தொழிலில் முதலீடு செய்யப்பட்டு கூடுதல் வட்டி தரப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்ததை, நம்பி ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட நிறுவனம் முறையாக வட்டி தரவில்லை என கூறப்படுகிறது.


வாடிக்கையாளர்கள் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தை அணுகியபோது முறையான பதில் கிடைக்காததால், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது நம்பிக்கை மோசடி, மோசடி செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் ரூ.360 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்துள்ளதாகவும்,  அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பெரியர் நகரை சேர்ந்த நேரு என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஹிஜாவு அசோசியேட்ஸ் எனும் தாய் நிறுவனம் மட்டுமின்றி அதை சார்ந்த, எஸ்.ஜி. அக்ரோ புராடக்ட்ஸ், அருவி  அக்ரோ புராடக்ட்ஸ், சாய் லட்சுமி எண்டர்பிரைசஸ்,  ராம் அக்ரோ புராடக்ட்ஸ் மற்றும் ஆர்.எம்.கே. புரோஸ் எனும் கிளை நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களும்,  hijaueowdsp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவர்கள் மட்டுமின்றி மேலும் நூற்றுக்கணக்கானோர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும், பொதுமக்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.