நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். 




அஜர்பைஜான், சென்னை உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் கடந்தாண்டு டைட்டில் அப்டேட் விட்டதோடு சரி, இதுவரை எந்த அப்டேட்டுகளும் விடா முயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வராததால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் எங்கு சென்றாலும் அப்டேட் கேட்பதையை மீண்டும் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். 


நடுநடுவே அஜித் பைக்கில் உலக சுற்றுலா சென்று வருவதால் ஷூட்டிங் தாமதமாகத் தான் தொடங்கியது. இப்படியான ஓராண்டை கடந்தும் படம் வெளியாவது பற்றி உறுதியான அறிவிப்பு இல்லாததும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 






இதனிடையே தற்போது விடாமுயற்சி ஷூட்டிங் இல்லையென்பதால் குடும்பத்துடன் அஜித் நேரம் செலவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு தன் மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக அவர் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இப்படியான நிலையில் அஜித்குமார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


ஆனால் அஜித் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளதாக் அவரது மேலாளரான சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் மார்ச் 15 ஆம் தேதி முதல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித் கலந்து கொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.