லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய பிம்பம் நடித்தது படத்தின் தோல்விக்கான காரணமாக அமைந்ததாக இயக்குநர் ஐஸ்வர்யா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 


லைகா நிறுவனம் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான படம் “லால் சலாம்”. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, நிரோஷா, செந்தில், அனந்திகா சனல்குமார்  உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கூட ஒரு காட்சிகளில் தோன்றியிருந்தார்.



ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த லால் சலாம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. இதனிடையே படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என இயக்குநர் ஐஸ்வர்யா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


அதில், “லால் சலாம் படத்தின் கதை எழுதும்போது மொய்தீன் பாய் கேரக்டர் மொத்தமே 10 நிமிடம் தான் வருவது போல அமைக்கப்பட்டிருந்தது. எப்படி செந்தில், ஜீவிதா உள்ளிட்ட கேரக்டர்கள் எழுதப்பட்டதோ அதன்படியே இந்த கேரக்டரும் எழுதப்பட்டது. அந்த கேரக்டரில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற நபர் வரும்போது 10 நிமிடம் மட்டும் காட்சிகளை வைக்க முடியவில்லை. அந்த கேரக்டரை சுற்றி கதை மாறியது. அதுதான் சரியாகவும் இருக்கும். ரொம்ப பவர்ஃபுல்லான நபர் வரும்போது அவரை சுற்றி கதை வரும்படி சிச்சுவேஷன் உருவாகிடுச்சு.


அதனால் படத்தில் இந்தெந்த காட்சிகளில் எல்லாம் அவர் இருக்க வேண்டும் என நினைத்து, மீண்டும் கதையை மாற்றி எழுத வேண்டியிருந்தது. குறிப்பாக இடைவேளை முதல் இரண்டாம் பாதி முழுக்க மொய்தீன் பாய் கேரக்டர் வந்து படத்தை நகர்த்த வேண்டும் என கதையில் எழுதப்பட்டது. 



ஆனால் படம் ஷூட் முடிந்து எடிட் செய்து பார்த்தால் வணிக நோக்கத்திற்காக மொய்தீன் பாய் கேரக்டருக்கென்று சில விஷயங்கள் சேர்க்கப்பட வேண்டிய கட்டாயமாகிறது. முதல் பாதியில் அந்த கேரக்டரை காட்டாமல் விட்டால் ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விடும். 2.25 நிமிட படத்தில் இரண்டாம் பாதி முழுக்க அவர் வந்தால் முதல் பாதி நீளம் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். அது சாத்தியமில்லை என்பதால் மீண்டும் திரும்ப எடிட் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.


பட ரிலீசுக்கு 2 நாட்கள்  முன்னால் மீண்டும் காட்சிகள் எடிட் செய்யப்பட்டு மொய்தீன் பாய் கேரக்டர் முன்னால் கொண்டு வருவதற்கான வேலைகள் நடந்தது. கதையாக லால் சலாம் படம் மிகவும் தரமானதாக இருந்தது. ஆனால் ரஜினிகாந்த் ஒருத்தரை காட்டிய பிறகு அந்த கதை எங்கேயும் நிற்க மாட்டேங்குது. செந்தில் கேரக்டர் தான் படத்தின் மையமாக வைத்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வந்த பிறகு யாரும் மற்ற எதையும் பார்க்க விரும்பவில்லை. அந்த சவாலை எங்கேயும் உடைக்க முடியவில்லை. நீங்க கதை சொல்றீங்களோ, ரஜினி எண்ட்ரீயான பிறகு அதன்பிறகு கதை அவருடன் தான் பயணிக்க வேண்டும் என புரிந்து கொண்டேன். அவர் எல்லாவற்றையும் மறைத்து விடும் அளவுக்கு பவர்ஃபுல்லான மனிதராக உள்ளார்” என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். இந்த நேர்காணல் பேட்டி  இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது.