lok sabha elections 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


காங்கிரசின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை:


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான, தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில்  அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் விதமாக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றன. அதில் மாநில கட்சிகள் மாநிலங்களுக்கான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க, தேசிய கட்சிகள்  நாடு தழுவிய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அந்த வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் வாக்காளர்களைக் கவரும் வகையில் மிகப்பெரிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை கருத்தில் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை  உருவாக்கப்பட்டுள்ளது என்பது தற்போதைய தகவலாக உள்ளது.  


ராகுல் காந்தி வெளியிடுகிறார்..!


அதில் அரசு வேலைகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம், பெண்களுக்கு இடஒதுக்கீடு, முஸ்லிம்களின் பொருளாதார நிலையை மதிப்பிட சச்சார் கமிட்டி அமைப்பது போன்ற வாக்குறுதிகள் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  இவை தவிர, தேர்வில் வினாத்தாள்களை கசிய விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மற்றும் சாதி வாரிக் கணக்கெடுப்பு போன்ற வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கையை காங்கிரஸ் காரிய கமிட்டி இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒப்புதல் கிடைத்ததும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.   தற்போது மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜோடோ நியாயா யாத்ரா நடந்து வருகிறது . படனாவர் பேரணியில் ராகுல் காந்தி தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட வாய்ப்பு உள்ளது. ராகுலுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அதில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தேர்தல் அறிக்கை விவரங்கள்:


காங்கிரசின் தேர்தல் அறிக்கை தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின்படி,



  • 30 லட்சம் அரசு வேலை வாய்ப்பு

  • வேலைக்கான நாட்காட்டி

  • அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க இலவச விண்னப்பங்கள்

  • அரசு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிவுகள் மீது கடும் நடவடிக்கை

  • ராணுவ வீரர்களுக்கு ஆள்சேர்க்கும் அக்னிபாத் திட்டம் ரத்து

  • பெண்களுக்கு ரூ.6,000 மாதாந்திர நிதியுதவி

  • மத்திய அரசு வேலைகளில் 33% இடஒதுக்கீடு

  • உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது

  • கேஸ் சிலிண்டர்கள் விற்பனை விலையை குறைப்பது

  • ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு

  • குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம்

  • சிரஞ்சீவி திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீட்டு திட்டம்

  • செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு ஊக்கமளிப்பது, உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.