நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் அஜித் 3வது முறையாக தயாரிப்பாளர் போனி கபூர் - இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணியில் துணிவு படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்கள் கலவையான விமர்சனத்தை சந்தித்த நிலையில் 3வது படத்தை பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார். ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசையமைத்துள்ளார். 


இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், தாய்லாந்து உள்ளிட்ட இடங்களில் நடந்த நிலையில் துணிவு படம் பொங்கல் வெளியீடாக இருக்கும் என ஓரளவு உறுதியான தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் தயாரிப்பு தரப்பில் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் நல்ல தகவல் வரும் என நம்பியிருந்தனர். இதனை பூர்த்தி செய்யும் வகையில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 






அதன்படி துணிவு படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், படம் பொங்கலுக்கு நிச்சயம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இப்படத்தின் ஓடிடி தளத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவியும் கைப்பற்றியுள்ளது. 


வாரிசு vs துணிவு 


ஏற்கனவே பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளதாலும் வாரிசு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.


கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடித்த ஜில்லா, அஜித் நடித்த வீரம் ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது. அதன் பின் 8 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் விஜய், அஜித் படங்கள் களமிறங்குவதால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.