குளிர்காலம் தொடங்க இருக்கும் நிலையில் கேதார்நாத் கோயில் சன்னதி நேற்று மூடப்பட்டது.
கேதர்நாத் கோயில் இந்தியாவின் 12 சோதிலிங்க சிவத் தலங்களில் ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில்,கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது. இக்கோயில் ஒரு கவர்ச்சியான கல் கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது. இக்கோவிலின் பூஜாரிகள் இக்காலங்களில் இங்கிருக்கும் மூலவர் சிலையை கீழே குப்தகாசி அல்லது ஊகிமட்டுக்கு எடுத்து சென்று அங்கு வைத்து பூஜைகளைத் தொடர்ந்து செய்வர். அதேபோல இங்கு வசிக்கும் அனைவரும் , இக்காலங்களில் கேதாரை விட்டு வெளியேறி ஆறுமாதங்களுக்கு பின்பே வருவர். பக்தர்கள் இக்காலங்களில் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படுவர்.
நடை திறக்கப்படும் நாட்களில் காலை முதல் இரவு வரை கோவிலில் பால் போக், மகா அபிஷேகம், ருத்ரா அபிஷேகம், அஷோடார், சிவ அஷ்டோத்திரம், சிவ சகஸ்கரநாமம், சிவ நாமாவளி, சிவ மகிமை எனும் பூஜைகளும், அர்ச்சனைகளும் தொடர்ந்து நடைபெறும். கோடைக்காலமே ஆனாலும் இங்கு இரவில் காணப்படும் குளிர் மிகக் கடுமையானது.
கேதார்நாத் தாமின் கருவறை நேற்று முன் தினம் தங்கத்தால் அலங்கரிக்கும் பணி நிறைவடைந்தது. இதற்கு முன் வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. கருவறையின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகள் 550 தங்க அடுக்குகளுடன் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் மூன்று நாடகள் நடைபெற்றதாகவும் கோயில் கமிட்டி உறுப்பினர் தெரிவித்தார். இந்த தங்க அடுக்குகள் கருவறைக்குள் பொருத்திய பின் மிகவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத், பத்ரிநாத், உள்ளிட்ட 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு இருக்கும். எனவே, குளிர்காலத்தையொட்டி, இக்கோவில்கள் 6 மாதங்களுக்கு மூடப்படுவது வழக்கம். கடும் பனிப்பொழிவு காரணமாக இந்த கோயில் தளங்கள் முழுமையாக பனியால் மூடப்படும். அதன்படி, கேதார்நாத் கோவில் நேற்று காலை 8.30 மணிக்கு மூடப்பட்டது. கோவிலை மூடுவதற்கு முன் சிறப்பு பூஜைகள், பல்லக்கு தூக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.