தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இவர் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளார். பைக் ரேஸர், ட்ரோன் தயாரிப்பாளர், துப்பாக்கிச் சுடும் வீரர் என்று பன்முகங்களை கொண்ட அஜித் சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் பைக் ரைடு மேற்கொண்டார். படப்பிடிப்பு ஒருபுறம் என்றாலும் தனக்கு பிடித்தமான வேலைகளுக்கு நேரம் ஒதுக்கி அதையும் செய்து வருகிறார். ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய அஜித் நேற்று துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் அஜித் இன்று திருச்சிக்கு விசிட் அடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக அஜித் திருச்சி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற டிசர் பேண்ட் அணிந்துகொண்டு ஸ்டைலாக நடந்து வரும் அஜித் அங்கு காத்திருந்த ரசிகர்களை நோக்கி கையை அசைத்தவாறு நன்றி எனக் கூறுகிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விரைவில் அஜித் ஏகே 61 திரைப்பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவுள்ளார். ஏகே 61 படக்குழு ஷூட்டிங்குக்கான வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது. தற்போது பெரிய வங்கி செட்டை உருவாக்கி உள்ளனர் படக்குழுவினர். `ஏகே 61’ திரைப்படம் உண்மைச் சம்பவமாக நடைபெற்ற வங்கிக் கொள்ளை நிகழ்வு ஒன்றைத் தழுவி உருவாகப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது வங்கி செட் ரெடியாகியுள்ளது.
சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள 102 ஆண்டுகள் பழமையான எஸ்பிஐ வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு Your Bank என்ற பெயரில் மிகப்பெரிய செட்டை ராமோஜி பிலிம் சிட்டியில் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் கசிந்துள்ளன. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகிவிட்ட நிலையில் இனி விறுவிறுவென படம் இறுதிக்கட்டத்துக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.