ஒரு ஷாட் இஞ்சி சாறு குடித்தால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா என்றளவுக்கு நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. இந்திய சமையலறைகளில் இஞ்சி இல்லாமல் இருக்காது. அதனால் இந்த இஞ்சிச் சாறு செய்வது அவ்வளவு எளிது. இஞ்சியின் மனம் காரணமாக அதனை நாம் தேநீரில் சேர்க்கிறோம். பல வேலைகளில் அதன் மகத்துவம் தெரியாலேயேதான் நாம் சேர்க்கிறோம். ஆனால் இஞ்சியில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய நோய்களில் இருந்து காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காலி வயிற்றில் ஒரு கப் இஞ்சிச் சாறு அருந்தி பாருங்கள் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
இஞ்சி ஷாட் செய்ய நல்ல சுத்தமான, ஃப்ரெஷ்ஷான இஞ்சி தேவை. அதை மிக்ஸரில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து சாறு பிழிந்து கொள்ளுங்கள். பின்னர் அத்துடன் எலுமிச்சை சாறு சேருங்கள். விரும்பினால் ஒரு சிட்டிகை மிளகு தூளும், கொஞ்சம் தேனும் சேர்த்துக் கொள்ளலாம். இதை ஒரு ஷாட்டுக்கு மேல் ஒரு நாளில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிகமாக எடுத்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு, அசிடிட்டி, ஏப்பம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். இஞ்சியில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் இருக்கின்றன. இது உடல்நலத்தைப் பேண அவசியமானது. இதில் ஜிங்க், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி3, வைட்டமின் பி6, டயட்டரி ஃபைபர், புரதம் ஆகிய ஊட்டச்சத்துகள் உள்ளன.
உடனடி சக்தி கிடைக்கும்:
ஒரு காலைப் பொழுதில் வெறும் வயிற்றில் கொஞ்சம் இஞ்சிச் சாறு அருந்துங்கள். அது நாள் முழுமைக்குமான புத்துணர்ச்சியை, சக்தியைத் தரும். அது ரத்த ஓட்டத்தை சீராக்கும். உடலில் உள்ள கழிவுகளை அகற்றும். நச்சுக்களை வெளியேற்றும். இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
குமட்டலை தடுக்கும்
இஞ்சிச் சாறு நமக்கேற்படும் வாந்தி, குமட்டலை சரி செய்யும். இஞ்சியில் இருக்கும் ஜிஞ்ஜரால்ஸ் அஜீரணக் கோளாறை சரி செய்யும். வேறு சில வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கும் தீர்வு தரும். கர்ப்பவதிகள் வாந்தி குமட்டலைப் போக்க அவ்வப்போது ஜிஞ்சர் ஷாட் எடுப்பதுண்டு. இஞ்சிச் சாற்றால் கருவில் இருக்கும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
இஞ்சிச் சாறு சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து. இஞ்சியில் உள்ள ஆண்ட்டி இன்ஃப்ளமேட்டரி சுவடுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவும். ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் அது இதய நோய்க்கு வழிவகுக்கும். அந்த வகையில் இஞ்சிச் சாறு இரண்டு நன்மைகளைத் தருகிறது.
அஜீரணக் கோளாறை சரிசெய்யும்
இஞ்சி உணவு ஜீரணத்தில் உதவும். வயிற்று வலியை சரி செய்யும். உப்பசம், அசிடிட்டி போன்ற உபாதைகளை அகற்றும். வயிறு சம்பந்தமான தொந்தரவு உள்ளோர் அவ்வப்போது இஞ்சிச் சாறு குடிக்கலாம். இது உடலில் வளர்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவும்.
தசை வலி, மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்தும்
இஞ்சியில் உள்ள பேரடால், ஜிஞ்சரால்ஸ், ஷோகால் ஆகிய மூலக்கூறுகள் மருத்துவ குணம் நிறைந்தவை. அதனால், இது தசை வலி, மூட்டு வலி, வீக்கம், மாதவிடாய் வலி ஆகியனவற்றை சரி செய்யும். குமட்டல், தலைவலியையும் கூட சரி செய்யும்.
இத்தனை மருத்துவ குணமுடைய இஞ்சிச் சாறை அளவறிந்து மருந்து போல் உட்கொண்டு வர நன்மைகளுக்கு குறைவிருக்காது.