பிரபல சினிமா தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் தயாராகி உள்ள நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரும் காத்திருப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது. கடைசியாக அஜித்தின் நடிப்பில் நேர் கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் 3 ஆண்டுகால காத்திருப்புக்கு பிறகு அப்டேட்டுக்களை மட்டுமே கொடுத்து வந்த வலிமை இன்று வெளியாகி ரசிகர்கள் கூட்டத்தால் ஹவுஸ்புல் ஆகி உள்ளது. 



சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ஐந்து திரைகளிலும் வலிமை திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. நேற்று இரவு முதல் திரையரங்கம் முன்பு குவிந்து மேள தாளங்க்ள் முழங்க நடிகர் அஜித்தின் கட்டவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்து திருவிழாவை போல ரசிகர்களால் கொண்டாடி வந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஏ.ஆர்.ஆர்.எஸ் திரையரங்கத்தில் 5 திரைகள் உள்ளதால்  அதிகாலை 4 மணி காட்சியில் தொடங்கி 7 மணி, 11 மணி காட்சி, 3 மணி, 6:30 மணி மற்றும் 11 மணி காட்சிகள் என 6 காட்சிகள் விகிதம் 5 திரைகளுக்கும் சேர்த்து 30 காட்சிகள் வரை வலிமை திரைப்படத்தை திரையிட திரையரங்கு நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இன்று ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் வரை திரைப்படத்தை காண வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 



இந்த நிலையில் அதிகாலை முதல் காட்சி திரைப்படம் ஒளிபரப்பு செய்ய காலதாமதம் ஏற்பட்டதால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் திரையரங்கில் இருந்த கண்ணாடிகள் மற்றும் இரும்பு ஷட்டரை உடைத்து எறிந்துவிட்டு திரை அரங்கிற்குள் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை சமாதானம் செய்தனர். பின்னர் அரை மணி நேரம் தாமதமாக வலிமை படம் திரையிடப்பட்டது.


ரசிகர்களின் இந்த வெறிச்செயலால் திரையரங்கில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் போலீஸ் பாதுகாப்புடன் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் நடிகர் விஜய் நடிப்பில் தலைவா மற்றும் துப்பாக்கி திரைப்பட வெளியீட்டின் போதும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தின் போதும் இதே போன்று சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கம் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.