மனிதநேய குறித்து பேசும் சிறுவனின் விடியோ இரு தினம் முன்பு வைரலாக நிலையில் அந்த சிறுவனின் குடும்பத்தை வீட்டை காலி செய்ய சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனிதநேயம் குறித்து பள்ளி சிறுவன் ஒருவன் பேசும் வீடியோ இரு நாட்கள் முன்பு சமூக வலைதளத்தை ஆக்கிரமித்திருந்தது. பிரபல தமிழ் யூடியூப் சேனல் ஒன்று, உங்களுக்குப் பிடிக்காத நபர்கள் யார் எனப் பொதுமக்களிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பேசிய இந்த குட்டி பையன், 'நாம் யாரையும் பிடிக்காத எனச் சொல்லக் கூடாது. இங்கு அனைவரும் நம்மை போன்றவர்கள் தான். சிலருக்கு இங்குக் கஷ்டம் இருக்கும். அவர்கள் கஷ்டத்தை உள்ளே வைத்துக் கொண்டு வெளியே யாரிடமும் சொல்லாமல் கூட இருப்பார்கள். எனவே, இங்கு யாரையும் பிடிக்காது என்று சொல்லக் கூடாது. இங்கு எல்லாரும் நம் நண்பர்கள் தான். என்னைக் கூட எல்லாரும் பல்லன் என்று கூறுவார்கள். இங்கு இருக்கும் எல்லாரும் நமக்கு நண்பர்கள் தான். நம் நாடு ஒற்றுமையான ஒரு நாடு! ஒற்றுமை இல்லாமல் நாம் இருக்கக் கூடாது. இங்கு மனித நேயம் பரவ வேண்டும். இல்லையென்றால், ஸ்பைடர் படத்தில் வரும் வில்லன் போல நிறையப் பேர் தோன்றும் வாய்ப்பு உள்ளது. எனவே , அங்கு மனித நேயம் மிக முக்கியம்' எனப் பேசியிருந்தான். சிறுவனின் இந்த பேச்சை பலரும் புகழ்ந்து பாராட்டி ஷேர் செய்து வரும் நிலையில் இந்த வீடியோ கடும் வைரலாக பரவியது. 



இந்த சிறுவனின் பேச்சு உடனடியாக இணையத்தில் டிரெண்டானது. அதன் பின்னர், இந்த சிறுவன் யார் என்றும் இந்தச் சிறு வயதில் இவருக்கு இந்தளவு பக்குவத்துடன் பேசச் சொல்லிக் கொடுத்தது பெற்றோர் குறித்தும் அறிந்து கொள்ள ஒட்டுமொத்த நெட்டிசன்களுமே ஆர்வமாக இருந்தனர்.


சென்னை கண்ணகி நகரில் வசிக்கும் இச்சிறுவனின் பெயர் அப்துல் கலாம். இவன் சென்னையில் உள்ள கிருத்துவ பள்ளியில் தான் படித்து வருகிறாராம். அவரது தாயார் தில்ஷாத் போகம். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மாணவி. அவரது நினைவாகவே தனது மகனுக்கு அப்துல் கலாம் எனப் பெயரிட்டுள்ளார். இந்த பேச்சு வைரல் ஆனதை தொடர்ந்து, பலரும் அந்த சிறுவனை வீடு தேடி வருவார்கள் என்றோ, எதுவும் பிரச்சனைகள் வரும் என்ற காரணத்தினாலோ, அவர்கள் தங்கியிருக்கும் வாடகை வீட்டை காலி செய்ய சொல்லி இருக்கிறார்கள். அது குறித்து அந்த சிறுவனின் அம்மா திவ்யா (எ) தில்ஷத் பேகம் பேசுகையில், "வர்தா புயல்ல எங்க சொந்த வீடு இடிஞ்சி போச்சு, அத சுத்தி என் கணவரோட சொந்தக்காரங்க எல்லாரும் இருந்தும், நாங்க கலப்பு திருமணம் என்பதால் எங்களுக்கு தங்குவதற்கு இடம் ஒதுக்கி தரவில்லை. நாங்களும் வீடு இடிஞ்சதால அரசாங்கத்திற்கு பெட்டிஷன் கொடுத்தோம் எதற்கும் பதில் வரவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் இப்படி ஒரு வாடகை வீட்டில் இருக்கும்போது, என் பையன் ஏதோ பேசினான் என்பதற்க்காக இந்த வீட்டையும் உடனடியாக காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம். அதுவும் காரணமே சொல்லவில்லை, அவர்களது சொந்த காரரங்கள் வருகிறார்கலாம், உடனடியாக காலி செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். இந்த பையன் பேசுனது தப்பா? எதுவும் தப்பா பேசிட்டானா?... அவனுக்கு தோன்றத பேசிருகான்." என்றார்.






மேலும் அவருக்கு வேலை கிடைக்காதது குறித்து பேசுகையில், "இதே காரணம்தான், கலப்பு திருமணம், என் பெயர் கூட பிரச்சனையாக வந்துள்ளது, வேலைக்கு தேர்வாகி உள்ளே சென்றபிறகு இதை தெரிந்துகொண்டு வேலையை விட்டு நீக்கியதெல்லாம் நிகழ்ந்துள்ளது. சமத்துவம், மனிதநேயம் இங்கேயே இல்லையே, நான் தங்கி இருக்கும் வீட்டிலேயே செத்து போச்சே, பிறகு வெளியில் எதை எதிர்பார்க்கமுடியும். இல்லம் தேடி கல்வி திட்டத்திலும் வேலை தேடினேன், எம்.எஸ்சி, எம்.ஃபில் எல்லாம் சொன்னால் இவ்ளோ படிச்சுருக்கியேம்மா என்று கூறி அனுப்பிவிடுகிறார்கள் என்று, குறைத்து பி.எஸ்சி, +2 என்று கூட சொல்லி இருக்கிறேன். ஆனாலும் வேலை கிடைத்த பாடில்லை. என் பையன் கேக்குறான், படி படி ன்னு எங்கள சொல்றியே, நீ இவ்ளோ படிச்சியே, அப்துல் கலாம் சார் கிட்ட படிச்சியே, நீ என்ன சாதிச்சுட்ட, உனக்கு வேலை யார் கொடுத்தான்னு கேக்குறான், என்கிட்ட பதில் இல்லை. " என்று கூறினார்.


தில்ஷாத் போகத்தின் தாயார் இந்து மதத்தைச் சேர்ந்தவர். காதல் திருமணம் செய்து கொண்ட தில்ஷாத் பேகம், அதன் பின்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவியுள்ளார். மாற்று மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டதால், 14 ஆண்டுகளாக தில்ஷாத் போகத்துடன் உடன் அவரது பெற்றோர் உட்பட யாரும் பேசுவதில்லை. ஒரு முறை தனது பாட்டி வீட்டிற்குச் சென்று இருந்த போது அவரது பாட்டி இவரை சேர்த்துக் கொள்ளவில்லையாம். அப்போது தன் மிகவும் காயப்பட்டதாகவும் தன்னை போல மற்றொருவர் காயப்படக் கூடாது என்று அப்போது தான் புரிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.