தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், கிங் ஆப் ஓபனிங்காகவும் வலம் வருபவர் அஜித்குமார். இவரது படம் வெளியாகிறது என்றாலே, ரசிகர்களுக்கு எப்போதும் கொண்டாட்டம்தான். கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் இல்லாமல் இருந்தால் உலககெங்கும் நேற்று வலிமை படம் வெளியாகியிருக்கும், ஆனால், கொரோனா காரணமாக வலிமை படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இதுவரை வெளியான அஜித்தின் திரைப்படங்களை கீழே காணலாம்,
வான்மதி ( 1996)
அஜித்தின் கேரியரில் மிகப்பெரிய ஹிட்டான காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியனின் இயக்கத்தில் அஜித் முதலில் நடித்த படம் வான்மதி. ஏழை இளைஞன் பணக்கார பெண்ணை காதலிக்கும் கதைக்களமான இந்த படம்தான் அஜித்தின் முதல் பொங்கல் ரிலீஸ் படம் ஆகும். வாலிப தோற்றத்தில் இருந்த அஜித்தின் நடிப்பை அனைவரும் ரசித்து இந்த படத்தை 100 நாட்கள் ஓடச் செய்தனர்.
தீனா (2001)
வான்மதியில் இருந்து அடுத்து பொங்கலுக்கு வெளியாகும் தனது திரைப்படத்திற்குள் அஜித்குமார் திரைத்துறையில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்திருந்தார். காதல்மன்னனாக வலம் வந்த அஜித்தை முழுவதும் ஆக்ஷன் ஹீரோவாக உருமாற்றியிருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். 2001ம் ஆண்டு வெளியான தீனா படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து, அஜித்திற்கு என்று தனி இளைஞர்கள் பட்டாளத்தையே உருவாக்கியது. இந்த படத்தில் இருந்துதான் அஜித் தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
ரெட் (2002)
இன்றைய காமெடி நடிகர் சிங்கம்புலி, அப்போது ராம்சத்யா என்ற பெயரில் இயக்கிய முதல் படம்தான் ரெட். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக மதுரை பின்னணியில் உருவான இந்த படத்தில் அஜித் குண்டான தோற்றத்தில் ரவுடியாக நடித்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகாஹிட் அடித்த நிலையில், படம் பெரியளவில் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதனால், ரெட் சுமாரான வெற்றியையே பெற்றது.
பரமசிவன் (2006)
தீனாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அஜித் – லைலா ஜோடி நடிப்பில் உருவாகியது பரமசிவன். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் நடிப்பில் வெளியான படம். சந்திரமுகிக்கு பிறகு பி.வாசு இயக்கியதால் பரமசிவன் மீது பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அஜித்தும் உடலை இளைத்து வித்தியாசமான தோற்றத்தில் களமிறங்கினார். ரசிகர்கள் மாஸ் ஓப்பனிங்கை கொடுத்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.
ஆழ்வார் (2007)
அஜித் நடிப்பில் 2007ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் ஆழ்வார். செல்லா இயக்கத்தில் குடும்ப பின்னணியில் பழிவாங்கும் படலமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் அஜித் தனது வழக்கமான நடிப்பை கொடுத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் ஆகிய நிலையிலும், போக்கிரி படத்தின் மாபெரும் வெற்றியாலும், ரசிகர்கள் ஆழ்வார் படத்தை ஏற்றுக்கொள்ளாததாலும் படம் தோல்வியடைந்தது.
வீரம் (2014)
தொடர் தோல்விகளுக்கு பிறகு மங்காத்தாவின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, தனது பாதைக்கு திரும்பிய அஜித் நடிப்பில் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் வீரம். இயக்குனர் சிவா அஜித்தை இயக்கிய முதல் படம். அண்ணன்- தம்பி பாசத்தை பிணைப்பாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு போட்டியாக, விஜயின் ஜில்லா படம் வெளியானது. போக்கிரி – ஆழ்வார் மோதலுக்கு பிறகு வெளியான இந்த பட வெளியீட்டில் இரண்டு படங்களுமே வசூலைக் குவித்தாலும், ஜில்லாவை விட வீரத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. இதுவரை இல்லாத வகையில் அஜித் கிராமத்து மனிதராக இந்த படத்தில் நடித்ததால் ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.
விஸ்வாசம் ( 2019)
வீரம், வேதாளம் என்று தொடர் வெற்றிகளை சிவா கூட்டணியில் அளித்த அஜித்திற்கு விவேகம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இருப்பினும், சிவா மீது நம்பிக்கை வைத்து விஸ்வாசம் படத்தில் நடித்தார். விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக ரஜினிகாந்தும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆக்ஷன் பேக்காக பேட்ட படத்தில் களமிறங்கினார். ஆனாலும், தந்தை – மகள் பாசத்தை கருவாக கொண்ட இந்த படம் அஜித்தின் கேரியரிலே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாகவும், ரிப்பிட்டேட் ஆடியன்சை கொண்ட திரைப்படமாகவும் விஸ்வாசம் அமைந்தது. விஸ்வாசம் படத்தில் கண்ணீர் வரவழைத்த கிளைமேக்ஸ் காட்சிகள் ஆக்சன் நாயகன் அஜித்தை, தங்கள் இல்லங்களில் ஒருவராக ரசிகர்களை பார்க்க வைத்தது.
இந்த வரிசையில் வலிமை படமும் இடம்பெறும் என்று எதிர்பார்த்த தருணத்தில் கொரோனா காரணமாக பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.