நடிகர் அஜித் குமார், தனது 61வது பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அமராவதி தொடங்கி ஆசை, அமர்க்களம், வீரம், விவேகம், நேர்கொண்ட பார்வை, வலிமை என பல படங்களில் நடித்து தற்போது தனது 61வது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச். வினோத். வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும், மக்களின் மனங்களில் பதியும் அளவிற்கு அவர் கதைகளை எடுத்துள்ளார். அஜித்தை வைத்து இவர் தற்போது இயக்கி இருக்கும் படம் துணிவு. இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அவரது துணிவு படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்குப் பின்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் ப்ளாஷ்பேக் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. அதில் அவர் தனது படிப்பு, ஆரம்ப கால வேலை பற்றியெல்லாம் பேசியுள்ளார். அதில் அவர், எனக்கு பொய் சொல்ல விருப்பமில்லை. நான் நன்றாக படிப்பேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். எனக்கு பள்ளியில் படிப்பு சரியாக வரவில்லை. ஆனால் எனக்கு சிறுவயதில் இருந்தே கார், பைக் மீது ஆர்வம் அதிகம். அதை ஓட்டுவதில் எவ்வளவு ஆர்வமோ அதே அளவுக்கு அதை அக்குவேராக பிரித்து சேர்ப்பதிலும் ஆர்வம் உண்டு. அதனாலேயே ஆரம்ப காலத்தில் நான் மெக்கானிக்காக வேலை பார்த்தேன். சென்னை மோட்டார்ஸில் 6 மாத காலம் அப்ரென்டீஸாக இருந்தேன். சொந்தமாக ஒரு மெக்கானிக் கராஜ் ஓப்பன் பண்ணவே ஆசை இருந்தது. ஆனால் என் வீட்டாருக்கு அது பிடிக்கவில்லை. கார் மெக்கானிக்காக இல்லாமல் நான் வேறு வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். அவர்களுக்காகவே நான் கார்மென்ட்ஸ் கம்பெனியில் மெர்கண்டைஸராக இருந்தேன். நான் சினிமாவுக்கு வந்ததெல்லாம் ஒரு விபத்து தான். இப்பவும் கூட என்றாவது ஒருநாள் ஒரு பெரிய கார்மென்ட்ஸ் ஃபேக்டரி ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
வேர்ல்டு டூர்..
அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். லைகா தயாரிக்கும் இதன் ஷூட்டிங்கில் விரைவில் இணையும் அவர், அடுத்த வருடத் தொடக்கத்தில் படத்தை முடிக்க இருக்கிறார். பின்னர், தனது நண்பர்களுடன் பைக்கில் உலகச் சுற்றுலா செல்ல இருக்கிறார். 18 மாதங்களில் 62 நாடுகளுக்கு அவர் பைக் டூர் செல்ல இருக்கிறார். அண்டார்டிகா உட்பட 7 கண்டங்களுக்கு செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த 18 மாதங்கள், சினிமாவுக்கு விடுமுறை அளித்துவிட்டு இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் அஜித். சமீபத்தில், தாய்லாந்திலும் அவர் பைக் டூரை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், நடிகர் அஜித் சமீபத்தில் தன்னை 'தல' என்ற அடைமொழியோடு இனி அழைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்டிருந்தார். உண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு 'தீனா' படத்தில் நடிகரும் ஸ்டன்ட் கலைஞருமான 'மகாநதி' சங்கர் தான் அஜித்தை 'தல' என்று அழைப்பார். அதற்கு பிறகே அவருக்கு 'அந்த அடைமொழி' பிற படங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பயன்படுத்தப்பட்டது.
இப்படி எப்போதும் எளிமையாகவும், பப்ளிக் அப்பியரன்ஸை தவிர்த்தும் தனக்கு பிடித்த பாணியில் வாழும் அஜித் தான் வளர்ந்து கொண்டிருந்த காலத்திலேயே உண்மையைச் சொல்லி, மனது விரும்புவதைச் சொல்லியே வளர்ந்துள்ளர் என்பதற்கு இந்த பழைய பேட்டி சாட்சியாகியுள்ளது.