பல்வேறு சிக்கல்களை கடந்து சமீபத்தில் வெளியானது வலிமை திரைப்படம். கலவையான விமர்சனங்களைப் பெற்ற வலிமை, வசூல் ரீதியில் லாபத்தைப் பெற்றது. ஆனாலும் வலிமை திரைப்படம் குறித்தும் அதில் நடித்த அஜித் குறித்தும் தொடர்ந்து விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டே வருகின்றன. திரைப்படம் சார்ந்த ரிவ்யூக்கள் படம் தொடர்பான பாசிட்டிவ் நெகட்டிவை பேசாமல் நடிகரின் உருவ கேலியாய் தொடர்வது, தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டலாக பேசுவதாகவும் தொடர்ந்தன. 


இப்படி பேசினால்தான் வைரலாக முடியும் என்று சில ரிவ்யூவர்கள் வாய்க்கு வந்ததை பேசி வருகின்றனர். அதுபோன்ற ரிவ்யூவர்களை திரைத்துறையினர் பலரே கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தங்களது கண்டங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில் ஒரு நினைவூட்டல் என்ற தலைப்பில் அஜித்தின் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அஜித் கூறிய கருத்தை மீண்டும் ஷேர் செய்துள்ளார் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா. 






நாணயத்துக்கு மூன்று பக்கம்..


கடந்த ஆகஸ்டில் சுரேஷ் சந்திரா அஜித்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நடிகர் அஜித்குமார் திரைத்துறையில் 30 ஆண்டுகாலம் நிறைவடைந்ததையடுத்து ரசிகர்களுக்கு கூறியுள்ள செய்தி என ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். அதில் , ரசிகர்கள், வெறுப்பாளர்கள், நடுநிலை ரசிகர்கள் என்பவர்கள் ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள். ரசிகர்களின் அன்பை கருணையுடன் ஏற்றுக்கொள்கிறேன். வெறுப்பவர்களிடம் இருந்து வெறுப்புகளையும், நடுநிலையாளர்களிடம் இருந்து எந்த பக்கமும் சாராத பார்வைகளையும் ஏற்றுக்கொள்கிறேன். வாழு..! வாழவிடு..! எப்போதும் நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.


இன்றும்...


அஜித்தின் அந்த அறிக்கையை மீண்டும் நினைவுப்படுத்தும் விதமாக ட்வீட் செய்துள்ள அஜித்தின் மேலாளர் சிலருக்கு ஒரு நினைவூட்டல் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்றுமே நிபந்தனையற்ற அன்பு என்று அஜித் சொன்னதை அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக வலிமை  ரிவ்யூ என்ற பெயரில் அஜித்தை உருவக்கேலி செய்தார் ப்ளூசட்டை மாறன். அவருக்கு பலரும் கண்டனங்களை பதிவிட்டனர்.நடிகர் ஆரி பேசுகையில், "தாராளமாக குறையை சொல்லுங்கள், இது தவறு, அது தவறு என்று கூறுவதில் தவறில்லை, அதனை கேட்டு திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் 'இந்த படத்துக்கு போகாதீங்க'ன்ற ரெஞ்சுக்கு அந்த படத்தை அடிச்சு துவைக்காதீங்க. ஒரு படத்தை காலி பண்ற அளவுக்கு விமர்சனம் செய்யுறது இருக்குல்ல அதை தான் நாங்கள் எதிர்க்கிறோம். ஒவ்வொரு இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளரும், எவ்வளவு பேர் கை கால்ல விழுந்து இந்த இடத்துக்கு வந்துருக்காங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சும் அதை நீங்க செய்யக்கூடாது. மல்லாக்க படுத்து எச்சி துப்பினால் அது நம்ம மேல தான் விழும். நாம் சார்ந்த துறையில் எப்படி ஒரு விமர்சனத்தை வைக்கணுமோ அப்படி வைங்க. முன்மாதிரியாக ஒரு விமர்சனத்தை வைங்க. அதுல இருந்து கத்துப்பாங்க எல்லாரும். தரம் தாழ்ந்த விமர்சனங்களில் நம் முகம் தெரியும்ன்னு நான் பிக் பாஸ்ல சொன்னேன். அதே தான் உங்களுக்கும். நான் யாரையும் சூசகமாக குறிப்பிடவில்லை, புளூ சட்டை மாறனைதான் சொல்கிறேன் என்றார்