சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து, சங்ககிரி அருகே உள்ள அக்கம்மாபேட்டை பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.



நேற்று மதியம் 2 மணியளவில் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தை அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் (41) என்பவர், ஓட்டிச் சென்றார். மதியம் 2.30 மணிக்கு சங்ககிரி புதிய பஸ் நிலையம் அருகே, அக்கம்மாபேட்டை என்ற இடத்தில் பேருந்து சென்ற போது. எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் உள்ள தென்னை மரத்தில் மோதி, 10அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. நேற்று முகூர்த்த நாள் என்பதால், 40க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்தனர் பேருந்து விபத்துக்குள்ளானதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறை, ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அவ்வழியே வந்த வாகனங்களில் அனுப்பி வைத்தனர். 



இந்த விபத்தில், சங்ககிரியைச் சேர்ந்த மேளம் வாசிக்கும் கலைஞர் கணேசன் (71) பலத்த படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த வனிதா (40), ஊத்தங்கரை பழனியப்பன் (71), சேலம் கவிதா (47), ஈரோடு சித்ரா (28), அனிதா (23), சேலம் வைரமணி (38), தர்மபுரி ராஜா (40), துரை( 52), சேலம் நடராஜ், தர்மபுரி ராமலிங்கம் (54), வெப்படை காசி (45) உட்பட 40க்கும் மேற்பட்டோர் சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, கோவை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான பேருந்தை 2 பொக்லைன்கள் மூலம் மீட்டு காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதனிடையே, படுகாயத்துடன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 45 வயது ஆண், தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும், சங்ககிரி டிஎஸ்பி ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சங்ககிரி துணை தாசில்தார்கள் ராஜேந்திரன், ஜெயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். இந்நிலையில் தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த முத்துகுமரன் (30) என்பவர், பேருந்தின் டிரைவர் வெற்றிவேல் கவன குறைவாக பேருந்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக புகாரளித்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.