ஓப்பன்ஹெய்மர் மற்றும் பார்பி திரைப்படங்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் இந்த இரண்டு படங்களில் எந்த படத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறார்கள் என்பது பேசுபொருளாகி வருகிறது. பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் இரண்டு படங்களையும் ஆதரிக்கவே செய்திருக்கிறார்கள். கோலிவுட் ஸ்டார் நடிகர் அஜித் குமாரின் குடும்பம் எந்தப் படத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கிறது தெரியுமா?


ஓப்பன்ஹெய்மர் Vs பார்பி


கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், அமெரிக்கா ஃபெரெரா, இசா ரே, கேட் மெக்கின்னன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பார்பி.


உலக அளவில் பிரபலமான பார்பி பொம்மைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் பார்பி. பல்வேறு அனிமேஷன் படங்களுக்குப் பிறகு இறுதியாக இப்படம் மனிதர்கள் நடிப்பில் உருவாகி உள்ளது. இப்படம் பார்பிகளின் உலகுக்கும் உண்மையான உலகுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பிரதிபலிக்கிறது. பார்பிக்களின் உலகில், பார்பிக்களான பெண்கள் ஆட்சி செய்ய, உண்மையான உலகில், ஆண்கள் அடக்குமுறை செய்கிறார்கள் என்பதை இத்திரைப்படம் எடுத்துக் கூறுகிறது.


மற்றொருபுறம், அணு ஆயுதத்தை கண்டுபிடித்த ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம் ஓப்பன்ஹெய்மர். உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஓப்பன்ஹெய்மர் படம், வரலாற்றின் ஒரு மிக முக்கியமான தருணத்தையும் அதை நிகழ்த்திய தனிநபர் ஒருவரின் உணர்வெழுச்சிகளையும் மிகச்சிறந்த திரை அனுபவமாக நமக்கு கொடுக்கிறது .


குடும்பத்துடன் திரையரங்கிற்கு சென்ற அஜித் குடும்பம்






இந்நிலையில், கோலிவுட் திரையுலகின் உச்ச்பட்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி அவரது மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் தங்களது விடுமுறையைக் கழிக்க குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றுள்ளனர். தன் இரண்டு பிள்ளைகளுடன் அறிவியலை மையப்படுத்தி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்டிருக்கும் ஓப்பன்ஹெய்மர் பட போஸ்டர் முன் நின்று கொண்டிருக்கும் ஷாலினியின் ஃபோட்டோ வெளியாகியுள்ளது.


இந்தப் புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த ஃபோட்டோவில் பிங்க் நிற உடையை ஷாலினி அணிந்துள்ள நிலையில், ஒருவேளை அவர் பார்பி படத்துக்கு சென்றிருக்க வாய்ப்புகள் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.