ஆகஸ்ட் 6ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் முக்கியமான ஒன்று. இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் , 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
எனினும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு தொலைதூரக் கல்வியும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 131 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் பல்கலையின் அங்கீகாரம் பெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், நாட்டின் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்துகொள்கிறார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் அவர், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மவுனம் காக்கும் முர்மு
மணிப்பூர் மாநிலத்தின் பெரும்பான்மை சமூகத்தினர் மைத்தேயி மக்கள். மாநிலத்தில் சுமார் 54 சதவீதம் பேர் இவர்கள்தான். அரசியல் முன்னெடுப்புகள் அனைத்துமே இவர்களைச் சுற்றித்தான் நிகழ்கின்றன. இவர்களுக்கு அடுத்தபடியாக சுமார் 18 சதவீத குக்கி பழங்குடியினரும் சுமார் 11 சதவீத நாகா பிரிவினரும் மணிப்பூரில் வசிக்கின்றனர்.
ஓபிசி பிரிவில் வரும் மைத்தேயி இன மக்கள் தங்களை எஸ்டி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனினும் ஏற்கெனவே எஸ்டி பிரிவில் உள்ள குக்கி பிரிவினர், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மணிப்பூர் உயர் நீதிமன்றம் மைத்தேயி இன மக்களின் கோரிக்கை குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கிய நிலையில், குக்கி சமூகத்தினர் கூடாது என்று பேரணி நடத்தினர்.
பேரணியில் மே 3ஆம் தேதி கலவரம் வெடித்தது. பாதுகாப்பு அளித்திருக்க வேண்டிய மாநில காவல்துறையில் மைத்தேயி சமூகத்தினர் அதிகமாக இருப்பதால், குக்கி சமூகத்துக்கு எதிராக அவர்கள் நடந்துகொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டனர். ஆனாலும் இன்னும் மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக மணிப்பூர் பற்றி எரிகிறது.
வன்முறைக்கு மறுநாள் மே 4ஆம் தேதி குக்கி பழங்குடி இனப் பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு, சாலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். பெண்களின் அந்தரங்க உறுப்புகளின் மீது கை வைத்து இளைஞர்கள் சிலர் அழைத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுகுறித்து பழங்குடிப் பெண்ணான முர்மு இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.