தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவருமானவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், சண்டைக்காட்சி ஒன்று மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இதற்காக படக்குழுவினர் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் அஜித்குமார் திரைப்பட நடிகராக மட்டுமின்றி ஆளில்லா குட்டி விமானம் தயாரிக்கும் பொறியாளராகவும், துப்பாக்கி சுடும் வீரராகவும் பன்முகத் திறன் கொண்டவராக திகழ்ந்து வருகிறார். அவர் சமீபகாலமாக துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார்.
சென்னை ரைபிள் கிளப்பின் உறுப்பினராக உள்ள நடிகர் அஜித்குமார், அவ்வப்போது அங்கு சென்று தீவிர பயிற்சி எடுப்பதை வழக்கமாக கொண்டு வருகிறார். சமீபகாலமாக, அவர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக, தீவிர பயிற்சியும் எடுத்து வருகிறார்.
சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 46வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை கைப்பற்றி அந்த போட்டியில் முதலிடத்தை பிடித்தார். அவரது இந்த வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ளார். இதற்காக படப்பிடிப்பு அல்லாத சமயங்களில், அஜித்குமார் தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் பயிற்சி எடுத்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்கில் வைரலாகியது.
அஜித்குமார் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடிகர் அஜித்குமார் நடிகராக மட்டுமில்லாமல் கார்பந்தய ஓட்டுநராகவும், மெக்கானிக், ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையற்கலை என்று பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார். திரைத்துறையில் இருப்பவர்கள் பெரும்பாலும் திரைத்துறையிலே பன்முகத்திறன் கொண்டவர்களாக வலம் வரும் சூழலில், நடிகர் அஜித்குமார் மட்டும் திரைத்துறையையும் தாண்டி பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையை பதித்து வருவதற்கு பலரும் அவருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமார் அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர்களை கொண்ட தக்ஷா குழுவினருக்கு ஆலோசகராகவும் உள்ளார். அவரது ஆலோசனையின் பேரில் செயல்பட்ட தக்ஷா குழுவினர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா விமானங்களை மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கான போட்டியில் பங்கேற்று 2ம் இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.