நடிகர் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படம் ரூ.100 கோடி வசூலை எட்டியதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் - நடிகர் அஜித் ஆகியோர் கூட்டணியில் வெளியான படம் “துணிவு”. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். துணிவு படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது. 






துணிவு படத்தின் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றிய நிலையில் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக நள்ளிரவு 1 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக்கோலம் என்பது போல நீண்ட நாட்களுக்குப் பின் அஜித் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கும் விதமாக துணிவு படம் அமைந்துள்ளது. மேலும் வசூலிலும் துணிவு படம் சாதனைப் படைத்து வருகிறது. 


மேலும் பொங்கலுக்கு வெளியாகியுள்ள விஜய்யின் வாரிசு படத்தைக் காட்டிலும் துணிவு படத்துக்கு அதிகளவில் ப்ரோமோஷன்கள் வெளியானது. துணிவு படம் தான் பொங்கல் பண்டிகையின் ரியல் வின்னர் என போஸ்டர் வெளியிட்டு போனி கபூர் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அந்த படத்தில் நடித்த பிரபலங்களும் படம் குறித்த தகவல்களை நேர்காணல்களில் வெளியிட்டு வருவதால் நாளுக்கு நாள் குடும்பம் குடும்பமான தியேட்டருக்கு சென்று துணிவு படத்தைப் பார்ப்பது அதிகரித்து வருகிறது. 






இந்நிலையில் துணிவு படம் வசூலில் உலகளவில் ரூ.100 கோடியை எட்டியுள்ளது. இன்னும் தொடர்ச்சியான விடுமுறைகள் இருப்பதால் கண்டிப்பாக அஜித்தின் திரைப்பட வரலாற்றில் துணிவு மறக்க முடியாத படமாக இருக்கும் என திரையுலகினர் தெரிவித்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சியான செய்தியை #Thunivu100Cr என்ற ஹேஸ்டேக் மூலம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.