அஜித் மாதிரி ஒரு பண்பான மருமகன் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம் என நடிகை ஷாலினியின் அப்பா ஏ.எஸ்.பாபு நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித், அமர்க்களம் படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் ஜோடிகளாக அஜித் - ஷாலினி தம்பதியினருக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.  


இப்படியான நிலையில், நடிகை ஷாலினியின் அப்பாவான ஏ.எஸ்.பாபு ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், அஜித் பற்றி பல விஷயங்களை பேசியுள்ளார். அதில், “'அமர்க்களம்' ஷூட்டிங்கில் தான் இரண்டு பேரும் லவ் பண்ணிருக்காங்க. அப்ப எனக்கு இந்த விஷயம் தெரியாது. ஒருநாள் அஜித்தே ஷூட்டிங்ல இருக்கும்போது என்கிட்ட வந்து, 'அங்கிள்.. உங்க வீட்டுக்கு வரலாமா? உங்களையும் ஆன்ட்டியையும் நேரில் பார்த்துப் பேச வேண்டும் என சொன்னார். நான் ஏதோ சினிமா விஷயம் பேசப்போறாருன்னு நினைச்சேன். வீட்டுக்கு வந்த அஜித் எதையும் யோசிக்காம டக்குன்னு 'உங்க மகள் ஷாலினியை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறீங்களா?'ன்னு நேரடியாகவே கேட்டார். 


அவர் அப்படி நேரடியாக கேட்டது எனக்கு ரொம்பப் பிடிச்சி போச்சு.  ஆனாலும் உடனே ஓகே சொல்ல எனக்கு சின்ன தயக்கம் இருந்துச்சு. காரணம் அந்நேரம் ஷாலினியும் முன்னணி நடிகையாக இருந்தா. அதன்பிறகு ஷாலினிக்கும் இதில் விருப்பம் இருக்குன்னு தெரிஞ்ச பிறகு தான் பிள்ளையோட விருப்பம் தான் முக்கியம் என்று பச்சைக்கொடி காட்டினோம்.


மேலும் இரண்டுநாள் கழிச்சு அஜித்தோட அப்பா, அம்மா, சகோதரர்கள் எங்க வீட்டுக்கு வந்து முறைப்படி பேச, அவங்களுக்கும் ஷாலினியை ரொம்பப் பிடிச்சு போச்சு. கல்யாணத் தேதியும் முடிவானது. எப்படி நிச்சயம் ஆன அன்றைக்கு சந்தோஷமா பேசி சிரித்தோமோ இப்பவரைக்கும் அதேமாதிரி இரண்டு குடும்பமும் ஒற்றுமையாவும் சந்தோஷமாவும் இருக்கோம். அஜித் இரண்டு குடும்பத்தையும் அப்படித் தாங்குறார்.


அதேபோல் ஷாலினிக்கும் அஜித்துக்கும் ஜாதகம் பார்த்தப்போ, 'பத்துப் பொருத்தமும் சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. அஜித் எங்களுக்கு மருமகன் இல்லை,இன்னொரு மகன்தான்.  அவர்கிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயமே உபசரிப்புதான். வீட்டில் உள்ள வேலை ஆட்களைக் குடும்ப உறுப்பினர் போல நடத்துவார். எங்களை முதன்முதலாக பார்த்தபோது, எப்படி மரியாதையாவும் அன்பாகவும்நடந்துக்கிட்டாரோ, அந்த அளவு துளி கூட இன்னைக்கு வரையும் குறையல.


என்னைக்கும்  நாம உயரத்துக்கு வந்துட்டோம்ன்னு நினைக்க மாட்டார்.  மருமகனின் அந்த குணம் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். சினிமால மிகப்பெரிய ஹீரோ எனக்கு மருமகனாக  வருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஷாலினி, ரிஷி, ஷாம்லி ஆகிய 3 பிள்ளைகளும் கடவுள் கொடுத்த வரம்னா, அஜித் மாதிரி ஒரு பண்பான மருமகன் கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம்‘ என அந்த நேர்காணலில்  ஏ.எஸ். பாபு  கூறியுள்ளார்.




மேலும் படிக்க: Kalaignar Magalir Urimaithogai: மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரவில்லையா? - இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம், எப்படி?