தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள், இன்று முதல் இ-சேவை மையங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:
திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டம், கடந்த 15ம் தேதி தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டட்தின் கீழ் பயனடைய விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற, அருகிலிருள்ள இ-சேவை மையங்களுக்குச் சென்று பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியான நபர்களுக்கு கோட்டாட்சியர் மூலம் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இதனிடையே, ஏற்கனவே விண்ணப்பித்தபோது 56.60 லட்சம் பேர் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பான காரணங்கள், மனுதாரர்கள் கொடுத்த செல்பொன் எண்களுக்கு இன்று முதல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மனுதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம். நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று கேட்டறியலாம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் அதிக கவனம் ஈர்த்தது. ஆனாலும், ஆட்சிக்கு வந்த பிறகு தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன.
56.6 லட்சம் பேர் நிராகரிப்பு:
கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி தர்மபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விண்ணப்பங்கள் பெறும் முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனிடையே உரிமைத்தொகை பெற தகுதியுடயவர்கள் யார் என்பது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறுவதற்காக 35 ஆயிரத்து 925 முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் 68 ஆயிரத்து 190 தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த முகாம்களின் முடிவில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில், வழ்காட்டு நெறிமுறைகளின் படி தகுதி இல்லாத சுமார் 56 லட்சத்து 50 ஆயிரம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதோடு, ஒரு கோடியே 6 லட்சத்து 55 ஆயிரம் பேர் உரிமைத்தொகை பெற தகுதிவாய்ந்தவர்கள் என கூறி அவர்களது மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்:
தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி கடந்த 15ம் தேதி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆனால், ஒருநாள் முன்னதாக 14ம் தேதியே பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில் தான், நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு:
இதனிடையே, “மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கு முழு தகுதி இருந்தும் பெயர்கள் விட்டுப்போயிருந்தால் அவர்களுக்கான குறைதீர்ப்பதற்கான அமைப்பு முறையை உருவாக்க உள்ளதாக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தாலுகா அளவில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏதேனும் காரணத்தால் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாமல் விடுபட்டு போயிருந்தால் உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி மைய தொலைபேசி எண்கள் மாவட்டம் நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.