இது என்னுடைய காலம் - அஜித் குமார் 

குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார் ஐரோப்பிய கார் ரேஸிங் சாம்பியன்ஷிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை அஜித் கார் பந்தையங்களில் கலந்துகொள்ள இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கார் ரேஸிங் குறித்தும் தன்மீதான விமர்சனங்கள் பற்றியும் பேசியுள்ளார் 

" மற்றவர்கள் என் மீது வைக்கும் விமர்சனங்களின் அடிப்படையில் நான் என்னை பார்க்க மாட்டேன். என் முதல் படத்தில் எனக்கு தமிழ் சரியாக பேச வரவில்லை என்று என்மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது.  அந்த விமர்சனங்களை புறந்தள்ளாமல் நான் அவற்றை சரி செய்து கொண்டேன். அதன் விளைவாக தான் இன்று இந்த நிலைமையில் இருக்கிறேன். எனக்கு இப்போது 54 வயதாகிறது. என்னால் முடிந்த வரை கார் ரேஸை தொடர விரும்புகிறேன். கடவுள் அருளால் என்னுடைய உடல் நிலை நன்றாக இருக்கிறது. பெரியளவில் காயங்கள் இல்லாமல் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் என் குடும்பத்தினர் உதவியால் நன்றாக இருக்கிறேன். சில ரேஸர்கள் 60 வயது வரை கார் பந்தையத்தில் இருப்பதை பார்த்திருக்கிறேன். அதேபோல் நானும் இருக்க நினைக்கிறேன். அஜித் குமார் ரேஸிங் அணியை நிகரற்ற ஒரு அணியாக உருவாக்க விரும்புகிறேன்.  சினிமாவைப் போல் கார் பந்தையத்திலும் காயங்கள் ஏற்படும்.  ஆனால் நான் உறுதியாக இருக்கிறேன். இது என்னுடைய காலம் பின்வாங்கமாட்டேன்" என அஜித் குமார் தெரிவித்துள்ளார் 

AK 64

அஜித்தின் அடுத்த படமான AK 64  படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கிறார். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கன்னட நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு அஜித் ரூ 180 கோடி சம்பளம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது