2025ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மொத்தம் 3.12 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில், 17,985 பேர் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் 1,327 பேர் குறைந்தபட்சமாக சேர்ந்து உள்ளதாகவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
யார் யார் எவ்வளவு மாணவர் சேர்க்கை?
இதன்படி, கே.ஜி. சேர்க்கை எனப்படும் மழலையர் பள்ளிகளில், ஜூன் 17ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 22,757 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1ஆம் வகுப்பு தமிழ் வழிக் கல்வியில் மொத்தம் 1,72,676 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் 52,057 பேர் சேர்ந்து உள்ளனர். மேலும் 2ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 65,391 பேர் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக 17,985 மாணவர்கள் மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 9528 மாணவர்களும் திருப்பூரில் 9,385 மாணவர்களும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதேபோல, சேலம் மாவட்டத்தில் 8573 பேரும் தென்காசி மாவட்டத்தில் 8019 பேரும் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
1,327 பேர் மட்டுமே நீலகிரியில் சேர்க்கை
குறைந்தபட்சமாக நீலகிரியில் 1,327 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். தாராபுரம் பகுதியில் 2082 பேரும் கோவில்பட்டியில் 2544 பேரும் சேர்ந்துள்ளனர். தேனியில் 2559 பேரும் ஒட்டன்சத்திரம் பகுதியில் 3013 பேரும் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.