ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன்
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் விவாகரத்து பற்றிய தகவல் தான் சமீப காலத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒன்று. கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின் அபிஷேக் பச்சன் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தாலும் ஐஸ்வர்யா ராய் பெரியளவில் நடிக்க வில்லை. தனது மனைவி நடிப்பது குறித்து ஒருபோதும் சமூக வெளியில் எதிர்கருத்து தெரிவித்தவர் இல்லை அபிஷேக் பச்சன். இருந்தும் ஐஸ்வர்யா ராய் குறைவாகவே படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்.
விவாகரத்து பெறப்போகிறார்களா அபிஷேக் ஐஸ்வர்யா?
சில தினங்களுக்கு முனர் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் அமிதாப் பச்சன் தனது குடும்பத்துடன் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக கலந்து கொண்டார். இது அவர்கள் குடும்பத்தில் இருக்கும் விரிசல் குறித்த கேள்விகளை எழுப்பியது. ஏற்கனவே அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் விவாகரத்து குறித்த சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் அபிஷேக் பச்சன் சமூக வலைதள பிரபலம் ஒருவரின் விவாகரத்தைப் பற்றிய பதிவை லைக் செய்திருந்ததும் இந்த வதந்திகளுக்கு வலு சேர்த்தன. இதுகுறித்து இதுவரை வெளிப்படையாக பேசாத அபிஷேக் பச்சன் தற்போது பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
விவாகரத்து குறித்து கேட்ட போது அவர் “ நான் இன்னமும் திருமணமானவன் தான். எங்கள் இருவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த மாதிரியான கேள்விகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்லப்போவதும் இல்லை. நீங்கள்தான் இதை ஊதி ஊதி பெரிதாக்குகிறீர்கள். உங்களுக்கு பரபரப்பும் செய்தியும் வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நடிகர்களாக பிரபலங்களாக நாங்கள் இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டியதாக இருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.