கொட்டுக்காளி
சூரி நடித்து பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டுக்காளி படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மலையாள நடிகை அனா பென் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மிஸ்கின் , வெற்றிமாறன், லிங்குசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் இயக்குநர் மிஸ்கின் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இயக்குநர் மிஸ்கின்
நிகழ்ச்சியில் பேசிய “சென்னையில் இருக்கும் 96 விழுக்காடு மக்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். இங்கு வந்தவர்கள் முதலில் பேருந்து நம்பர்களை மனப்பாடம் செய்வோம், பின் கடலுக்கு செல்வோம், பின் ஷூ போடுவதற்கு கால்கள் பழக்கபடுத்துகிறோம். நாம் பிறந்து வளர்ந்த ஊரைவிட்டு இந்த நகரத்தில் வந்து நடமாடிக் கொண்டிருக்கிறோம். அப்படி நகரத்திற்கு வந்தாலும் நம்மைப் போலவே ஜீன்ஸ் அணிந்தாலும் இன்னும் அந்த கிராமத்தை விட்டு மனதளவில் வராத ஒருவன் கலைஞனாக இருக்கிறான். அவனுக்கு தான் வளர்ந்த அந்த கிராமத்தில் இருந்து உலகத்தைப் பார்ப்பது தான் முழுமையாக தெரிகிறது. அந்த வகையில் பாரதிராஜாவுக்கு அடுத்து நான் வினோத் ராஜை சொல்வேன். ஒரு திரைப்படம் எதற்கு உருவாகிறது என்று என்னுடைய உதவி இயக்குநர்களை அடிக்கடி கேட்பேன். என்னை விட்டு 250 இயக்குநர்கள் என்னை விட்டு போயிருக்கிறார்கள். 3000 பேர் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். அவர் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரு கேள்வி இதுதான். பெரும்பாலானவர்கள் சொல்லும் ஒரே பதில் நான் எதாவது சாதிக்க வேண்டும் என்பதாக தான் இருக்கும். ஆனால் வினோத்ராஜ் என்னிடம் ஒருவேளை உதவி இயக்குநராக இருந்திருந்தால் அவனிடம் இந்த கேள்வியை கேட்டிருப்பேன். ஆனால் அவர் இவர்கள் எல்லாம் சொன்ன பதிலை அவர் சொல்லியிருக்க மாட்டான். ‘என்னுடைய கதையின் வழி இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன்’ என்றான்
அம்மணமாக ஆட தயார்
நான் ஒருமுறை சிவகார்த்திகேயன் அலுவலகத்திற்கு சென்றபோது அங்கு என் அருகில் ஒல்லியாக ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். அவனிடம் பெயர் கேட்டபோது வினோத்ராஜ் கூழாங்கல் படம் எடுத்திருப்பதாக சொன்னான். செரி அடுத்து மெதுவா பண்ணு என்று நான் சொல்ல வரும்போது நான் அடுத்த படம் தொடங்கிவிட்டதாக அவன் சொன்னான். நான் உடனே யார் மியூசிக் டைரக்டர் என்று கேட்டேன். அவன் யாருமே இல்லை என்று சொன்னான். உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது. இவன் பெரிய மயிறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன். ஆனால் கொட்டுக்காளி படம் பார்த்தபோது தான் தெரிந்தது வினோத்ராஜ் என்னை செருப்பால் அடித்தான்.
இந்த படத்தை மக்களிடம் எப்படியாவது கொண்டு சேர்க்க வேண்டும் என்று நான் யோசித்துக் கொண்டு வந்தேன், என் மகள் பிறந்த தருணத்திற்கு நிகரான ஒரு படம் இது. நான் நிறைய படங்களை குட்டிக்கரணம் அடித்து பாராட்டியிருக்கிறேன். அதனால் மக்கள் எல்லாரும் இந்த படத்தைப் போய் பார்க்க வேண்டும் என்றால் நான் உங்கள் முன்னால் அம்மணமாக கூட ஆட தயாராக இருக்கிறேன். இளையராஜாவுக்குப் பிறகு வினோத்ராஜ் காலில் விழுந்து இந்த மேடையில் நான் முத்தமிட தயாராக இருக்கிறேன்” என்று மிஸ்கின் பேசினார்