சமீப காலமாகவே, சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஒரு விபத்து நடந்துள்ளது. சாலையில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது.


கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: இதில், இரண்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து எச்எஸ்ஆர் லேஅவுட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, ஹெப்பல் அருகே, வால்வோ பஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கார்கள் மீதும் இரு சக்கர வாகனங்கள் மீதும் மோதியது.


பேருந்தை டிரைவர் ஒற்றை கையில் ஓட்டியது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. சாலையில் பேருந்தின் முன்னால் போக்குவரத்தை நெரிசலை பார்த்து பிரேக் போட முயற்சிக்கிறார். ஆனால், சில வினாடிகளிலேயே, நான்கு கார்கள் மற்றும் ஐந்து இரு சக்கர வாகனங்களின் மீது பஸ் மோதிவிடுகிறது.


ஓட்டுநர் இருக்கைக்கு பேருந்து நடத்துனர் விரைந்து செல்வதும், ஏன் பிரேக் போடவில்லை என ஓட்டுநரை பார்த்து சைகையில் கேட்பதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இறுதியில் வாகனங்களுடன் முட்டி மோதி பஸ் நின்றுவிடுகிறது.


வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி:


 






இந்த விபத்தால் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.