துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லிவர் சிரோசிஸ் என்ற நோயால் அவதிப்பட்டு வந்த அபிநய் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையறிந்த திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களால் முடிந்த உதவியை செய்திருந்தனர். இந்த நிலையில் அபிநய் இன்று (நவம்பர் 10) அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களும், சினிமா துறையைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தை தொடர்ந்து ஜங்ஷன், சக்சஸ், சிங்கார சென்னை, தாஸ், பொன் மேகலை, தொடக்கம், சொல்ல சொல்ல இனிக்கும், பாலைவனச்சோலை, ஆறுமுகம், கார்த்திக் அனிதா, கதை, ஆரோகணம், என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களில் அபிநய் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரபல பிஸ்கட் நிறுவன விளம்பரம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதுமட்டுமல்லாமல் பிரபல வில்லன் நடிகர் வித்யூத் ஜமாலுக்கு துப்பாக்கி மற்றும் அஞ்சான் படங்களில் டப்பிங் பேசியுள்ளார். கல்லீரல் நோய்க்கு நீண்டகாலமாக சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு நடிகர் தனுஷ், கேபிஒய் பாலா ஆகியோர் பண உதவி செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லிவர் சிரோசிஸ் நோய்
நீண்ட கால குடிப்பழக்கம், கல்லீரல் கொழுப்பு ஆகியவை காரணமாக லிவர் சிரோசிஸ் நோய் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது இயற்கையாக செயல்படும் கல்லீரலின் செயல்பாட்டை பாதித்து உயிரிழப்பு வரை நிகழ்த்தும் என சொல்லப்படுகிறது. மேலும் லிவர் சிரோசிஸின் அறிகுறிகள் ஆரம்பத்தில் பெரிய அளவில் வெளிக்காட்டாது. அதேசமயம் இது மருத்துவத்துறையில் குணப்படுத்த முடியாத நோய் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இதனை தொடக்கத்தில் கண்டறிந்தால் சிகிச்சை மூலம் கட்டுக்குள் வைக்கலாம் என சொல்லப்படுகிறது.
திடீரென தோன்றும் பசியின்மை, எடை இழப்பு, கீழ் கால்கள், கணுக்கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம், வயிற்றில் திரவம் சேர்வதால் உண்டாகும் வீக்கம், அதிகப்படியான சோர்வு, தோல் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம் தோன்றுதல், சருமத்தில் அரிப்பு, சிறுநீர் நிறமாறுதல் ஆகியவை இதன் அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.
மது அருந்துவதை நிறுத்துவது, என்ன காரணம் என கண்டறிவது, தேவைப்படும் பட்சத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது ஆகியவை இதனைக் கட்டுப்படுத்தும் முறையாகும். இந்த நோயால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 26 ஆயிரம் இறப்புகள் பதிவாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.