மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்தவர்கள் ஏராளம். அப்படி தமிழ் சினிமாவில் ஒரு சாக்லேட் பாயாக என்ட்ரி கொடுத்தவர் நடிகர் அப்பாஸ். 1996ம் ஆண்டு வெளியான 'காதல் தேசம்' படம் மூலம் அன்பே அன்பே... என ரசிகைகளை உருக செய்தவர். ஆண்கள் அனைவரும் அப்பாஸ் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு ரசிகை கூட்டத்தை சேர்த்தவர். அந்த சமயத்தில் அப்பாஸ் ஹேர் ஸ்டைல்தான் இளைஞர்கள் மத்தியில் சென்சேஷனாக இருந்தது. அப்பாஸ் கட் சலூன்களில் பிரபலமானது. அறிமுகமே அட்டகாசமாய் அமைத்து கொண்ட நடிகர் அப்பாஸ் பிறந்ததினம் இன்று. 



காதல் தேசம் படம் வெளியான முதல் இரண்டு நாளில் பெரிய அளவு ஓப்பனிங் கிடைக்கவில்லை. ஆனால் அடுத்த இரண்டே நாளில் அப்பாஸ் வீட்டு வாசலில்  ரசிகர் கூட்டம் அலைமோதியது. அடுத்தடுத்து 18 படங்களில் கமிட்டானார். ஓவர் நைட்ல முதல் படத்திலேயே உச்சத்திற்கு சென்ற நடிகர் என்றால் அது அப்பாஸ் தான். ஏராளமான படங்கள் கால்ஷீட் இல்லாதால் பிரஷாந்த் நடித்த ஜீன்ஸ், விஜய் நடித்த காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்கள் அப்பாஸ் நடிக்க தவற விட்ட படங்கள். ஆனால் அவர் கமிட்டான 18 படங்களில் முதலில் நடித்த இரண்டு படங்களும் படு பிளாப் படங்களாக அமைந்ததால் அடுத்து அவர் கமிட்டாகி இருந்த 16 படங்களின் தயாரிப்பாளர்களும் கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்க முடிவெடுத்தனர். எப்படி ஓவர் நைட்டில் உச்சத்திற்கு சென்றாரோ அதே போல ஓவர் நைட்டில் கீழே தள்ளப்பட்டார். 


தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிப்படங்களில் ஒரு கலக்கு கலக்கிய அப்பாஸுக்கு தமிழ் கொஞ்சம் கூட தெரியாது. காதல் தேசம் படத்தில் அப்பாஸுக்கு பின்னணி குரலாக ஒலித்தது நடிகர் விக்ரமின் குரல்தான். சோலோ ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற நிபந்தனை எதுவும் இல்லாமல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மாதவன், அஜித், பிரபுதேவா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.  


மொழி தெரியாததால் கதை தேர்வு சரியாக அமையாமல் வாய்ப்புகளை இழந்தார் அப்பாஸ். ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் அவரால் மக்களோடு கனெக்ட் செய்து கொள்ள இயலவில்லை. வடநாட்டு முகத்தின் சாயல் கூட ஒரு காரணமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் வாய்ப்புகளே இல்லாமல் போனபோது சீரியல், விளம்பரங்களில் கூட தலைகாட்டினார். நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் லீக் ஒன்று துவங்கியது. அதை வரைமுறைபடுத்திக்கொண்டு வந்ததற்கு முக்கியமான காரணம் அப்பாஸ். 




ஒரு காலகட்டத்தில் நியூசிலாந்தில் ஒரு சாதாரண மனிதராக பெட்ரோல் பங்கில், பைக் மெக்கானிக்காக எல்லாம் வேலை செய்துள்ளார். குழந்தைகளுக்கு வரும் தற்கொலை எண்ணங்களை தடுப்பதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக சில காலம் இருந்து வந்தார்.


ஆஸ்திரேலியாவுக்கு சென்று அதற்கான பயிற்சிகளை எல்லாம் மேற்கொண்டுள்ளார். அதன் மூலம் ஒரு வருமானத்தை ஈட்டினார். 


மீண்டும் தமிழ் சினிமாவில் வருவேன் என இன்றும் நம்பிக்கையுடன் காத்துக்கொண்டு இருக்கிறார் நடிகர் அப்பாஸ். இந்த ஆண்டு அவருக்கு சிறந்த ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.