சியா கே ராம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராமராக நடித்த ஆஷிஷ் ஷர்மா ஆதிபுருஷ் படம் குறித்து தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 


ஓம் ராவத்  இயக்கத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான், லட்சுமணனான சன்னி சிங் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘ஆதி புருஷ்’. சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா இருவரும் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு  இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என  5 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி வெளியானது. 


வெளியான நாள் முதல் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வரும் ஆதிபுருஷ் படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் படுதோல்வி கண்டுள்ள இப்படம் நாளுக்கு நாள் கடும் எதிர்ப்புகளை சந்தித்து வருவதோடு, வசூலிலும் சறுக்கி வருகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகர்கள் முகேஷ் கண்ணா, கஜேந்திர சவுகான் உள்ளிட்ட பலரும் கடுமையாக விமர்சித்தனர். 


இந்நிலையில் சியா கே ராம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராமராக நடித்த ஆஷிஷ் ஷர்மா, ஆதிபுருஷ் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பான பேட்டி ஒன்றில், ‘நமது வேதங்களை நம்முடைய  சினிமா தெரிந்துகொள்ளப் போவதைக் கண்டு ஆரம்பத்தில் மிகவும் உற்சாகமாக இருந்தேன். காரணம் நீண்ட காலமாக நமது சொந்த வேதங்களைப் பற்றி நாம் அறியாமல் இருந்தோம்.  அந்த மாதிரியான எதிர்பார்ப்பை ஏமாற்றமளிக்கும் விதத்தில் ‘ஆதிபுருஷ்’ படம் உள்ளது. மேலும் ஒரு நடிகர் என்ற பார்வையில் இப்படம் இன்னும் ஏமாற்றமளிக்கிறது.


இந்த படத்தில் எந்த ஆராய்ச்சியும் இல்லை. இது ராமாயணத்தை உருவாக்கும் ஒரு சோம்பேறி முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளில் இருந்து  எடுக்கப்பட்டுள்ளது போல உள்ளது. அதாவது இந்துக்களின் உணர்வை பணமாக்க முயற்சிப்பது போன்றது. ஆதிபுருஷ் படத்தின்  தயாரிப்பாளர்கள் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.நமது கலாசாரத்தை, நமது சமூகத்தை அது இருந்த விதத்தில் சித்தரிப்பதில் நாம் வெட்கப்படுகிறோம்.


அதில் பெருமிதம் கொள்வதற்குப் பதிலாக, மேற்கத்திய தயாரிப்பில் படம் எடுக்க முயற்சிக்கிறோம். அங்குள்ள தொழில்நுட்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒரு இந்தியக் கதையைச் சொல்லுங்கள். மேற்கத்திய மயமான இந்தியக் கதையை சொல்லாதீர்கள் என ஆஷிஷ் ஷர்மா  தெரிவித்தார். முன்னதாக ராமாயணம் தொடரில் ராமனாக நடித்த அருண்கோவில் கூட ஆதிபுருஷ் படத்துக்கு எதிராக தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.