உத்தரப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண ஊர்வலம்:
உத்தரப்பிரதேச மாநிலம் கோகுல்பூர் அர்சரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர யாதவ். இவருக்கு ஷிவ்வீர், சோனு மற்றும் புல்லன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதனிடையே கடந்த ஜூன் 23 ஆம் தேதி 2வது மகன் சோனுவின் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் உறவினர்கள், நண்பர்க புழைசூழ திருமண ஊர்வலம் சென்றுள்ளனர். எட்டாவாவில் இருந்து சௌபியா பகுதியில் உள்ள கங்காபூர் கிராமத்திற்கு ஊர்வலமானது நடைபெற்றது.
புது மருமகள் சோனி (20) வருகையால் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியான சூழலில் இருந்துள்ளனர். மேலும் அன்றைய தினம் இரவு ஒரு மணி வரை அனைவரும் டிஜே வாசித்து பாடி நடனமாடிக் கொண்டிருந்தனர்.
வெட்டிப்படுகொலை:
இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் சோனு, சோனி, சவுரப் நகரைச் சேர்ந்த மைத்துனர் ஹவிலியா , இளைய சகோதரர் புல்லன், சகோதரனின் நண்பர் தீபக் என 5 பேரையும் மூத்த பையன் ஷிவ்வீர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். இந்த தாக்குதலில் தந்தை சுபாஷ், அவரது மனைவி மற்றும் மாமா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது வீடே இரத்த களமாக காட்சியளிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஷிவ்வீர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் எஸ்பி வினோத் குமார் தலைமையிலான குழு ஒன்று அர்சரா கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பெரும் பரபரப்பு:
கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காகவும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்த 3 பேரில் ஒருவர் இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஷிவ்வீர், நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும், திருமணத்தில் கலந்துகொள்ள வீட்டிற்கு வந்ததாகவும் தெரிய வந்தது.
6 பேர் குடும்ப உறுப்பினராலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.