மேற்கு வங்க மாநிலத்தில் 2  சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டு கோர விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் ஓண்டா நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இதில் சரக்கு ரயிலின் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஓண்டா நிலையத்தில் வழியாக முன்னால் சென்ற சரக்கு ரயில் மீது பின்னால் வந்து ரயில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சரக்கு ரயில்களின் 12 பெட்டிகள் தடம்புரண்டது. இரண்டு சரக்கு ரயில்களும் காலியாக இருந்ததால் பொருட்சேதம் பெரியளவில் இழப்பு ஏற்படவில்லை. 


அதேசமயம் இரண்டு ரயில்களும் எப்படி மோதிக்கொண்டன  என்பது தொடர்பாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் தண்டவாளத்தில் பெட்டிகள் சிதறி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விரைந்து கவிழ்ந்து கிடக்கும் பெட்டிகளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் நிலைமை சீராகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 


இதனிடையே சரக்கு ரயில் ஒன்று லூப் லைனில் இருந்து மெயில் லைனிக்கு தடம் மாறியது. அப்போது பின்னால் வந்த சரக்கு ரயிலுக்கு சிவப்பு சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை மீறி பின்னால் வந்த ரயில் வேகமாக மோதியுள்ளது. 


தொடரும் ரயில் விபத்துகள் 


இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து துறையான ரயில்வே துறையில் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிசாவில் உள்ள பஹனகா அருகே மேற்கு வங்கம் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ்  தடம்மாறிச் சென்று சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. 


அப்போது எதிரே அடுத்த தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்தியாவையே உலுக்கிய இந்த விபத்தில் 292 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆங்காங்கே ரயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கோடிக்கணக்கில் பணம் புழங்கும் ரயில்வே துறை, ரயில்வே பணிகளில் போதுமான பராமரிப்பு மேற்கொள்ளாமல் இருப்பதே காரணம் என கூறப்படுகிறது.