Continues below advertisement

இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து ஊடகங்களிடமும், ரசிகர்களிடமும் பகிர்ந்து கொள்ளும் வகையில் படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

சேரனிடம் ஜிம் டிரைனராக பணியாற்றிய ஆரி

நடிகர் ஆரி பேசுகையில், ''இங்கு பேசிய அனைவரும் சேரனுக்கும், அவர்களுக்குமான நட்பையும் , உறவையும், அன்பையும் பேசினார்கள். அவருடைய உறவினர் ஒருவர் கொடுத்த கடிதம் தான் எனக்கும், அவருக்குமான அறிமுகம். அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். படத்தின் பணிகள் தொடங்கும் போது அழைப்பு விடுக்கிறேன் என்றார். அவர் ஆட்டோகிராப் என்ற படத்தை இயக்குகிறார் என்று தெரிந்தவுடன் அவரை மீண்டும் தொடர்பு கொண்டேன். 

Continues below advertisement

அப்போது நான் ஜிம் டிரைனர். அதனால் சிக்ஸ் பேக் உடல் தோற்றத்தையும் ட்ரெயினராக மாறிய போது உடல் எடை கூடிய தோற்றத்தையும் அவர் பார்த்தார். அப்போது அவர் நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள், என கேட்டார். நான் ஜிம் டிரைனர் என்று சொன்னேன். அதன் பிறகு நான் ஒரு படத்தில் நடிக்கிறேன். நீ புகைப்படத்தில் காட்டியது போல் என்னாலும் மாற முடியுமா, எனக் கேட்டார். மாற முடியும் என்று சொன்னேன். 

சேரனின் உழைப்பு 

நான் கேள்விப்பட்டவரை அந்த காலகட்டத்தில் ஒரு கேரக்டருக்காக உடலை வருத்திக் கொள்வது கமல்ஹாசன் ஒருவர் மட்டும்தான்.‌ அதன் பிறகு நடிகர் விக்ரம் அந்த விஷயங்களில் ஆர்வம் காட்டினார். சேரன் அதே போல் விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் கேட்டபோது, இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருடன் பழகும் வாய்ப்பு கிடைக்குமே என்பதால் அவருடைய ஜிம் டிரெயினராக மாறினேன். 

அவருடைய ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. அவரிடம் என்னை கவர்ந்த மற்றொரு விஷயம் அவருடைய நினைவுத்திறன். படப்பிடிப்பு நடந்த தருணங்களில் என்னை கேரளாவிற்கு அழைத்துச் சென்று அங்கு எனக்கென்று தனியாக ஒரு அறையை ஒதுக்கி அவரும் நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்வார். அந்த தருணத்தில் கிடைத்த ஓய்வில் தான் இப்படத்தின் கதையை என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டு முடித்ததும் இந்த படம் ஹிட் ஆகிவிடும், ஏனென்றால் நானும் ஒரு லவ் ஃபெயிலியர் கேஸ் தான் என்றேன். 

சாதி ஒழிப்பு பேசியவர்

இன்று சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்புகளை வழங்குகிறார் என மாரி செல்வராஜ் கொண்டாடப்படுகிறார். ஆனால் 28 ஆண்டுகளுக்கு முன்பே 'பாரதி கண்ணம்மா' படத்தின் மூலம் சாதியம் சார்ந்து சாதிய ஒழிப்பு தொடர்பான படைப்பை கொடுத்தவர் சேரன். அதேபோல் ஆட்சியின் நிறை குறைகளை பற்றி 'தேசிய கீதம்' படத்தின் மூலம் துணிச்சலுடன் சொன்ன இயக்குநரும் சேரன் தான். 

நம்பிக்கை கொடுத்த படம் 

இன்று காதலைப் பற்றி இளைய தலைமுறை ஜாலியாக குறிப்பிடுகிறார்கள். 'எனக்கு ரெண்டு பிரேக்கப் மச்சான்'. 'நாலு பிரேக்கப் மச்சான்' என்று சொல்கிறார்கள். ஒரு காதலுக்குப் பிறகு மீண்டும் ஒரு காதல் வரும் என்ற நம்பிக்கையை கொடுத்த படம் தான் ஆட்டோகிராப். ஒரு காதலுடன் வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைத்த ஏராளமான இளைஞர்கள் மத்தியில் இப்படி ஒரு படம் வந்தவுடன் மற்றொரு காதல் வரும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியது. காதல் தொடர்கதை தான் என்ற விசயத்தை சொன்ன படம் ஆட்டோகிராப். 

இங்கு மேடையில் இயக்குநரை பற்றி அவருடைய உதவியாளர்கள் தங்களுடைய எண்ணங்களை சுதந்திரமாக பகிர்ந்து கொண்டார்கள் என்றால் அதற்கும் காரணம் இயக்குநர் சேரனின் ஜனநாயக தன்மை தான்.‌ இதை நான் மனதார பாராட்டுகிறேன்.‌ இந்தப் படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் தவறாமல் பதிவிடுங்கள். ஏனெனில் இது போன்ற படங்கள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்,'' என்றார்.