தஞ்சாவூர்: பி.ஹெச்.டி., படித்தே தீரணும் என்ற வேட்கையுடன் உள்ள தஞ்சாவூர், திருச்சி மாவட்ட மாணவர்களா நீங்கள். மத்திய பல்கலையில் பி.ஹெச்.டி., சேர்க்கை ஆரம்பம் ஆக உள்ளது. வரும் டிசம்பர் 30 கடைசி தேதி தேதி ஆகும். இதற்கான தகுதி, கட்டணம் பற்றிய முழு தொகுப்பு. முழு விவரம் இதோ!
NAAC-ஆல் "A+" தர அங்கீகாரம் பெற்ற புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி., சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் கீழ் செயல்படும் மற்றும் NAAC-ஆல் "A+" தர அங்கீகாரம் பெற்ற பெருமைக்குரிய புதுச்சேரி பல்கலைக்கழகம் (Pondicherry University), 2026-27 கல்வி ஆண்டிற்கான Ph.D. திட்டங்களுக்கான (Ph.D. Programmes) சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நுழைவுத் தேர்வுப் பிரிவின் கீழ் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டப் படிப்புகளைத் தொடரத் தகுதியான மாணவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உயரிய கல்வித் தரம் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட விரும்பும் தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாணவர்களே இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
பி.ஹெச்.டி., திட்டங்களுக்கு விண்ணப்பிக்க, மாணவர்கள் 10+2+3+2 என்ற கல்வி முறையிலோ அல்லது 10+2+5 என்ற கல்வி முறையிலோ படித்து, தொடர்புடைய துறையிலோ அல்லது அதனுடன் தொடர்புடைய துறையிலோ முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மானுடவியல் மற்றும் சமூக அறிவியல், மேலாண்மை, வர்த்தகம், அறிவியல், கல்வி, நுண்கலை மற்றும் மொழிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகள்/துறைகள்/மையங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான தரத்துடன்) முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். இறுதி ஆண்டு முதுகலைப் படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ஹெச்.டி., திட்டங்களுக்கான மாணவர் சேர்க்கை, பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட துறைகள்/மையங்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும்.
மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கும் மாற்றுத் திறனாளிகள் (PH), பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பழங்குடியினர் (ST), மற்றும் திருநங்கைகளுக்கு (Transgender) விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை (Nil), எனினும் அவர்கள் உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், கட்டணம் ரூ.750 ஆகும். மற்ற பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1500 ஆகும்.
ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பம் பயன்படுத்தப்பட வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த முடியும். தவறான தகவல், தவறான பாடக் குறியீடு, மையக் குறியீடு அல்லது தவறான பிரிவு (OBC/SC/ST/EWS/Gen) அடிப்படையில் கோரப்படும் எந்தவொரு உரிமைகோரலும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படாது.
பி.ஹெச்.டி., சேர ஆர்வமுள்ள மாணவர்கள் கவனத்திற்கு. ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள்: நவம்பர் 12, 2025, ஆன்லைன் பதிவு செய்வதற்கான கடைசி தேதி: டிசம்பர் 30, 2025. விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pondiuni.edu.in மூலம் மட்டுமே ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
படிப்புகள், தகுதி மற்றும் இடஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டை பார்க்கவும். தெளிவாக அனைத்து விஷயங்களையும் படித்து பின்னர் உங்கள் விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அனுப்புங்கள். கடைசி தேதிக்கு நாட்கள் இருக்கிறது என்று கால தாமதம் செய்யாமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள் மாணவர்களே.