ஏ.ஆர் முருகதாஸ்


அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் முருகதாஸ். தொடர்ந்து ரமணா, கஜினி , 7 ஆம் அறிவு, துப்பாக்கி , கத்தி , ஸ்பைடர் , சர்கார் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி  படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தமிழைத் தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப் பட்டது. இந்தியில் ஆமீர் கான் இப்படத்தில் நடித்து முருகதாஸ் இயக்கினார் . இப்படத்தில் வேலை செய்த அனுபவம் குறித்தும் முருகதாஸ் பற்றி நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் புகழ்ந்து பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.


முருகதாஸிடம் நான் கற்றுக் கொண்ட ஒரு பண்பு


பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான தி கிரேட் இந்தியன்  கபில் ஷோ நிகழ்ச்சியில் சமீபத்தில் ஆமீர் கான் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தனது அனுபவங்களில் இருந்து பகிர்ந்துகொண்டார் ஆமீர் கான். அப்போது அவர் இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் பற்றியும் பேசினார் .






“இயக்குநர் முருகதாஸ் இடம் நான் முக்கியமான ஒரு குணத்தை கற்றுக் கொண்டேன். முருகதாஸ் என்கிற பெயரை கேட்டதும் அவர் ஆறடி இருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர் பார்ப்பதற்கு ஒரு ஸ்கூல் பையன் மாதிரிதான் இருப்பார். முதல் முறை அவர் என்னைப் பார்க்க வந்த போது கைகளை கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டு சின்ன பையன் மாதிரி பேசினார். அவரிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அவருக்கு பேசும்போது ஃபில்டர் இல்லாமல் மனதில் இருப்பதை அப்படியே பேசிவிடுவார். நீங்கள் ஏதாவது ஐடியா அல்லது கதையில் ஏதாவது மாற்றம் சொன்னால் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே அவர் முகம் சுளித்து ‘ நோ சர் வெரி பேட் “ என்று சொல்லிவிடுவார். எதிரில் இருப்பவருக்கு கஷ்டமாக இருக்குமா என்பதைப் பற்றி எல்லாம் அவர் யோசிக்கவே மாட்டார். பொதுவாக இந்த மாதிரியான சூழலில் வேறொருவர் என்றால் அவர் முதலில் நாம் சொல்வதை நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு பின் இப்படி பண்ணிக்கலாமா என்று லாவகமாக பேசுவார்கள். ஆனால் முருகதாஸ் பிடிக்கவில்லை என்று வெரி பேட் என்று ஒரே போடாக போட்டு விடுவார். ஒரு ஐடியா அவருக்கு பிடித்து விட்டது என்றால் ‘ சூப்பர் சார்’ என்று உடனே சொல்லிவிடுவார். முருகதாஸிடம் இருந்த இந்த குணத்தைத் தான் நான் கற்றுக் கொண்டேன்” என்று ஆமீர் கான் தெரிவித்துள்ளார்