கூலி
ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். நாகர்ஜூனா , உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் , செளபின் சாஹிர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். கூலி இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று ஜெய்பூரில் தொடங்க இருக்கிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெய்பூர் சென்றார். தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி நடிகர் ஆமீர் கான் கூலி படப்பிடிற்காக ஜெய்பூர் கிளம்பி சென்றுள்ளது தெரியவந்துள்ளது. ஜெய்பூர் விமானநிலையத்தில் ஆமீர் கான் வந்திறங்கு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் வசூல் மன்னனான ஆமீர் கான் இப்படத்தில் இணைவது படத்தின் மீது தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இந்தி திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தமிழில் வெளியான பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த. வெற்றிபெறவில்லை. இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிய படங்கள் 500 கோடி 1000 கோடி வசூல் சாதனைகளை செய்துவரும் நிலையில் தமிழ் கமர்சியல் படங்களின் மீது கடும் அழுத்தம் உருவாகியுள்ளது. தெலுங்கில் சமீபத்தில் வெளியாகிய புஷ்பா 2 ஒட்டுமொத்த இந்திய சினிமா வசூல் சாதனைகளை ஆட்டம் காண செய்துள்ளது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சமீபத்தில் வெளியான கங்குவா படம் பான் இந்திய வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் கூலி படத்தின் மேல் குவிந்துள்ளது.
ரஜினி பிறந்தநாளுக்கு கூலி அப்டேட்
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி வரவிருக்கிறது. ரஜினி பிறந்தநாளையொட்டி அவரது இரு படங்களுக்கான அப்டேட் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூலி படத்தில் இருந்து ரஜினியின் ஸ்பெஷல் லுக் ஒன்றும் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோவும் வெளியாக இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூவமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.