இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டைப் பயிற்சியாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக உள்ள வெற்றிமாறன் அசுரன் படத்திற்குப் பிறகு இயக்கி வரும் படம் ‘விடுதலை’. சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். முதல் முறையாக வெற்றிமாறன் - இளையராஜா கூட்டணி இணைந்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்க,விஜய் சேதுபது போராளியாக நடித்து வருகிறார். மேலும் விடுதலையில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் இணைந்துள்ளார். அதேபோல் தனுஷூம் ஒரு பாடலை பாடியுள்ளதால் எப்போது இந்த படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிலையில், கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இயக்குநர் வெற்றிமாறன் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை படம் 2 பாகங்களாக வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதில் முதல் பாகம் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விரைந்து படப்பிடிப்பை முடிக்க படக்குழு மும்முரமாக உள்ளது.
இந்த நிலையில், சென்னை வண்டலூர் அருகே விடுதலை படப்பிடிப்பு நடந்து வந்தது. இதில் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்த போது, ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் கீழே விழுந்தார். இதனையடுத்து அவரை படக்குழுவினர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன்றி சுரேஷ் உயிரிழந்து விட்டார். இதனால் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.