ஆஸ்கர் 2024


2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் 11ஆம் தேதி வழங்கப்பட இருக்கின்றன. முன்னதாக விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள படங்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இறுதி வெற்றியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு வெளியான ஓப்பன்ஹெய்மர், பார்பீ, கில்லர்ஸ் ஆஃப் தி ப்ளவர் மூன், அனாடமி ஆஃப் ஏ ஃபால், புவர் திங்ஸ், மேஸ்ட்ரோ, உள்ளிட்ட பல்வேறு படங்கள் இந்த முறை விருது வெல்லும் பட்டியலில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. இதில் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியுள்ள ஓப்பன்ஹெய்மர் படம் மட்டும் மொத்தம் 13 பிரிவுகளின் கீழ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்கள் தவிர்த்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் விருதுக்கு தேர்வாகின. இதில் சில படங்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெறாத நிலையில் இன்னும் சில படங்கள் போட்டியில் நிலைத்துள்ளன. 


ஓடிடி தளத்தில் ஓளிபரப்பாகும் ஆஸ்கர் விருதுவிழா


ஒவ்வொரு முறையும் இந்த நிகழ்ச்சியை ஒரு பிரபலம் தொகுத்து வழங்குவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பிரபல காமெடியன் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் இந்த நிகழ்ச்சியை நான்காவது முறையாக தொகுத்து வழங்க இருக்கிறார். எந்த நடிகர், எந்தப் படம் ஆஸ்கர் விருதை தட்டிச் செல்லப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படியான நிலையில் ஆஸ்கர் விருது விழா பிரபல ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகிறது. வரும் மார்ச் 10 ஆம் தேதி மாலை 7 மணியளவில் லாஸ் எஞ்சலஸில் தொடங்க இருக்கும் ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில்  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. விருது அறிவிக்கப்படுவது தவிர்த்து விருது வென்ற கலைஞர்களின் உரையும் இதில் இடம்பெறும். 


நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டிருக்கும் ஆஸ்கர் பட்டியல்


ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களை ரசிகர்கள் பார்க்கும் வகையில் பல்வேறு ஓடிடி தளங்கள் இந்தப் படங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிஸ் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் லைவ் ஆக்‌ஷன் மற்றும் அனிமேஷன் மற்றும் ஆவணப்படங்கள், குறும்படங்கள் உள்ளிடவை இடம்பெற்றுள்ளன. இது தவிர்த்து ஒரு சில படங்கள் திரையரங்கங்களில் திரையிடப்பட்டு வருகின்றன.




மேலும் படிக்க : Manjummal Boys: குடிப்பொறுக்கிகளை கொண்டாடும் நம்மூர் அரைவேக்காடுகள்; மஞ்சும்மல் பாய்ஸை வறுத்தெடுத்த ஜெயமோகன்!


Divya Sathyaraj: பணத்துக்காக இப்படி செய்யாதீங்க: தனியார் மருத்துவமனைகளை கிழித்த திவ்யா சத்யராஜ்!