Manjummel Boys: மலையாளத்தில் வெளியான ’மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


மஞ்சுமெல் பாய்ஸ் படம்:


மலையாளத்தில் சிதம்பரம் இயக்கத்தில், சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. நேரடி மலையாள சினிமாவான இப்படம் கமல்ஹாசனின் குணா படத்தின் ரெஃபரன்ஸ், மற்றும் குணா குகையில் எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட காரணங்களாலும், விறுவிறு திரைக்கதையாலும் மலையாள ஆடியன்ஸ் தாண்டி தென்னிந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


தமிழில் தற்போது வெளியாகியுள்ள கோலிவுட் படங்கள் தாண்டி திரையரங்குகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில், அரங்கு நிறைந்த காட்சிகளாக மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பினைப் பெற்று வருகிறது. முன்னதாக நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு வாழ்த்து பெற்ற நிலையில், உதயநிதி ஸ்டாலின், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பிற நட்சத்திரங்களையும் சென்னை வந்த படக்குழு சந்தித்தது.


Me Too குற்றச்சாட்டு:


இந்த நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் மீது, அவரது முதல் படத்தில் நடித்த நடிகை ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக குற்றச்சாட்டை இணையத்தில் தெரிவித்துள்ளார். அதாவது, சிதம்பரம்  இயக்கத்தில் ஜான்.ஈ. மான் என்ற படத்தில் எலிசபத் நடித்திருக்கிறார்.  இவர் தான் தற்போது இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 


கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் ’மஞ்சுமெல் பாய்ஸ்' என பெயர் 'மஞ்சுவெல் கேர்ள்ஸ்' என இருக்கக் கூடாதா? என்று  கேள்வி எழுப்பப்பட்டது. இந்த பதிவிற்கு நடிகை பிராப்தி எலிசபத், சில கமெண்ட்ஸ்களை பதிவிட்டிருந்தார்.  அதில், ”இந்த இயக்குநர் பற்றியும் அவரது ஆண் நண்பர்கள் பற்றியும் நான் சொல்லக்கூடிய விஷயங்களை சொல்கிறேன். இயக்குநர் வாட்ஸ் அப்பில் எனக்கு மெசேஜ் செய்வார். ஆண்களின் விரல்கள் எப்போதும் பெண்களை நோக்கி தான் குற்றம்சாட்டுவார்கள்.


 ஒரு ஆண் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பமாட்டார்கள். அவரு என்ன பண்ணாரு என்பதை வெளியே சொல்ல முடியாத வலியில் நான் இருக்கிறேன். நீங்களே சொல்லுங்க நான் என்ன பண்ணுறது" என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவுகள்  பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.  






நடிகை பிராப்தியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநரின் தரப்பில் இருந்து எந்த பதிலும் வெளியாகவில்லை. ஒருவர் வளர்ந்தவுடன் Metoo குற்றச்சாட்டுகளை வைப்பது வழக்கமாகிவிட்டது என்று சிலர் கூற, இன்னும் சில இதற்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.